வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்


வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்
x

வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

கொடியேற்றம்

சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சந்திவீரன் கூடத்தில் இருந்து விநாயகர், சேவுகப்பெருமாள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சேவுகப் பெருமாள், பூரண புஷ்கலாதேவியருடன் உற்சவராக சப்பரத்தில் கோவிலை வலம் வந்து சன்னதி மடத்தில் எழுந்தருளினார்.

பிடாரி அம்மனுக்கு சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து சேவுகப் பெருமாள் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் குலால வம்சாவழி சிவாச்சாரியர்கள் மூலம் வேத மந்திரங்கள் முழங்க கஜகொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.

தேரோட்டம்

வண்ண மலர் அலங்காரத்தில் சேவுகப்பெருமாள் அய்யனார் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தேவஸ்தான கண்காணிப் பாளர் தண்ணாயிரம் உள்ளிட்ட கிராம முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். 10 நாட்கள் மண்டகப்படி நிகழ்ச்சியாக நடைபெறும் திருவிழாவில் 5-ம் நாள் திருவிழாவான திருக்கல்யாண விழாவும், 6-ம் நாள் சமணர் கழுவேற்றம் கழுவன் திருவிழாவும், 8-ம் நாள் புரவி எடுப்பு திருவிழாவும், 13-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

10-வது நாள் பூப்பல்லக்கு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. தினமும் இரவில் வெள்ளி சிம்மம், மூஷிகம், பூதம், குதிரை, ரிஷபம், கேடயம் உள்ளிட்ட வாகனங்களில் சாமி வீதிஉலா நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் சிங்கம்புணரி கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.


Next Story