திருச்செந்தூர் கோவிலில் யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா


திருச்செந்தூர் கோவிலில் யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா
x

மாசித்திருவிழா சனிக்கிழமை தொடங்குவதை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று (சனிக்கிழமை) மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா நடந்தது.

இன்று மாசித் திருவிழா கொடியேற்றம்

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு விழாக்களில் மாசித் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். கோவிலில் இந்த ஆண்டு மாசித் திருவிழா இன்று (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதனை முன்னிட்டு நேற்று மாலையில் யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா நடந்தது. முன்னதாக திருச்செந்தூர் வடக்கு ரதவீதியில் உள்ள 14 ஊர் செங்குந்தர் 12-ம் திருவிழா மண்டபத்தில் சிதம்பரதாண்டவ விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கொடிப்பட்டத்துக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா

பின்னர் கோவில் யானை தெய்வானை மீது கிருஷ்ணமூர்த்தி தீட்சிதர் அமர்ந்து கொடிப்பட்டத்தை பிடித்தவாறு 8 வீதிகளிலும் உலா வந்து மீண்டும் கோவிலை சேர்ந்தார்.

விழாவில் கோவில் பேஸ்கர் ரமேஷ், 14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின்முறை சங்க துணைத்தலைவர் பொ.மாரிமுத்து, நிர்வாகி ச.மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

6-ந்தேதி, தேரோட்டம்

தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 10-ம் நாளான வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதாகுமரன், செந்தில் முருகன், ராமதாஸ், கணேசன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story