கொடிமரத்து சுடலைமாடசாமி கோவில் கொடை விழா
ஸ்ரீவைகுண்டம் ஆற்றங்கரை கொடிமரத்து சுடலைமாடசாமி கோவில் கொடை விழா நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் ஆற்றங்கரை கொடிமரத்து சுடலைமாடசாமி கோவில் கொடைவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சுடலைமாடசாமி கோவில்
ஸ்ரீீவைகுண்டம் ஆற்றங்கரை கொடிமரத்து சுடலைமாடசாமி கோவில் கொடைவிழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 4 மணிக்கு மாரி உச்சினிமாகாளி அம்மன் கோவிலில் இருந்து அம்பாள், சுவாமி ஆபரணங்கள் ஊர்வலமாக அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6 மணிக்கு ஆற்றங்கரையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. இரவு 7 மணிக்கு கணபதி ஹோமம், கும்பம் ஏற்றுதல், குடிஅழைப்பு நிகழ்ச்சியும், நள்ளிரவு 12 மணிக்கு சாஸ்தா பிறப்பு பூஜையும், தொடர்ந்து சுவாமிக்கு திருகாப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
பூக்குழி இறங்கிய பக்தர்கள்
2-ம்நாள் காலை 5 மணிக்கு கோவிலில் சிவனைந்த பெருமாள் சுவாமிக்கு கொடை நடந்தது. காலை 7 மணிக்கு ஆற்றங்கரை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து நேர்த்திக் கடன் கொண்டு வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மதிய கொடை நடந்தது. இரவு 8 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் இருந்து சுவாமிக்கு படைத்த பிரசாதம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர் நடைபெற்ற அர்த்தசாம கொடையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.