போலீசாரின் மோட்டார் சைக்கிளில் ஒளிரும் மின்விளக்கு அலாரம்
குற்றத்தை தடுக்க இரவில் ரோந்து செல்லும் போலீசாரின் மோட்டார் சைக்கிளில் ஒளிரும் மின்விளக்கு அலாரம் அமைக்கப்பட்டுள்ளது.
செய்யாறு
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின்பேரில் செய்யாறு போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட செய்யாறு, அனக்காவூர், மோரணம், பிரம்மதேசம், பெரணமல்லூர் மற்றும் தூசி ஆகிய போலீஸ் நிலையங்களில் பணியாற்றக்கூடிய போலீசார் ரோந்து வாகனத்தில் ஒளிரும் மின்விளக்கு மற்றும் அலாரம் பொருத்தப்பட்டது.
இதையடுத்து மோட்டார்சைக்கிள் ஊர்வலத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், முதல்கட்டமாக 40 போலீசாரின் மோட்டார் சைக்கிளில் ஒளிரும் மின்விளக்கு மற்றும் அலாரம் பொருத்தப்பட்டு உள்ளது.
இரவு நேரங்களில் ரோந்து செல்லும்போது ஒளிரும் மின்விளக்கு மற்றும் அலாரத்தினை பயன்படுத்த வேண்டும். குற்றச் சம்பவங்களை தடுக்க இரவு நேரங்களில் ரோந்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ரோந்து மோட்டார் சைக்கிள்கள் பஸ் நிலையம், மார்க்கெட், பெரியார் சிலை வரை சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் செய்யாறு இன்ஸ்பெக்டர் பாலு உள்பட சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.