தட்டார்மடம் புனித தேவசகாயம் ஆலயத்தில் புதிய கெபி திறப்பு
தட்டார்மடம் புனித தேவசகாயம் ஆலயத்தில் புதிய கெபி திறப்பு விழா நடந்தது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே தட்டார்மடம் பங்கின் துணை பாதுகாவலர் புனித தேவசகாயம் ஆலய திருவிழா சனிக்கிழமை தொடங்கி திங்கள்கிழமை வரை 3 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் மாலையில் புதிய கொடிமரம் அர்ச்சிப்பு மற்றும் கொடியேற்றம் நடைபெற்றது. பங்குதந்தை கலைசெல்வன் கொடிமரம் அர்ச்சித்தார். விழாவுக்கு அருள்பணியாளர் அன்புசெல்வன் தலைமை தாங்கினார். கொழுந்தட்டு பங்குதந்தை இருதயராஜ் திருவிழா கொடியேற்றினார். பூச்சிக்காடு அருள்பணியாளர் வசந்தன் மறையுரை நடத்தினார். 2-ஆம் நாள் காலையில் திருப்பலி, மாலை சாத்தான்குளம் மறைவட்ட முதன்மைகுரு ஜோசப் ரவிபாலன் தலைமையில் அருள்தந்தை லியோன், மேரி இம்மாகுலேட் மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வர் 'விஜயன் ஆகியோர் முன்னிலையில் ஜெபமாலை, சிறப்பு மாலை ஆராதனை நடைபெற்றது. 3-ஆம் நாளான நேற்றுமுன்தினம் காலை 7மணிக்கு மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமை வகித்து, புனித தேவசகாயம் கெபியை அர்ச்சித்து திறந்து வைத்தார். தொடர்ந்து திருவிழாகூட்டுத்திருப்பலி நடைபெற்றது. முன்னதாக ஆயருக்கு சென்டா மேளத்துடன் பூர்ண கும்ப மரியாதையுடன் பங்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் மறை மாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம், மறை மாவட்ட பொருளாளர் சகாயம், அருள்பணியாளர்கள் நெல்சன் பால்ராஜ், வெளி இளங்குமரன்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பங்குதந்தை கலைசெல்வன் தலைமையில் பங்கு மக்கள் செய்திருந்தனர்.