வேலூரில் இருந்து விரைவில் விமானங்கள் இயக்கப்படும்


வேலூரில் இருந்து விரைவில் விமானங்கள் இயக்கப்படும்
x

வேலூரில் இருந்து விரைவில் விமானங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய மந்திரி வி.கே.சிங் தெரிவித்தார்.

வேலூர்

வேலூரில் மத்திய மந்திரி வி.கே.சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

இந்திய நாட்டின் வளர்ச்சி, சமூக பாதுகாப்பு அரசியல் வளர்ச்சி ஆகியவற்றில் கடந்த 9 ஆண்டுகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. உள்நாட்டின் தயாரிப்புகளைக் கொண்டே நம் நாட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. இது போன்ற வளர்ச்சி வேறு எந்த நாட்டிலும் இல்லை. கொரோனா தொற்று காலத்திலும் கூட இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அதிகரித்து இருந்தது.

இந்தியாவில் 61 வகையான தொழில்களுக்கு 132 நாடுகள் முதலீடு செய்துள்ளன. இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 3 கோடி வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அதே போன்று ஜல்ஜீவன் திட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

விமானம் இயக்க நடவடிக்கை

ஒவ்வொரு கிராமத்திலும் சாலைகள் கொண்டுவரப்பட்டு ஒரு நாளைக்கு புதிதாக 38 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. சாலை வசதியில் உலகத்திலேயே 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. அடுத்த ஆண்டிற்குள் சாலை அமைப்பதில் இந்தியா முதல் இடத்துக்கு வரும். 2014 -ம் ஆண்டு 74 விமான நிலையங்களே இருந்தது. இப்போது 148 விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளது. உலகத்திலேயே இளைஞர்களை அதிகம் கொண்டுள்ள நாடாக இந்தியா உள்ளது.

இந்தியாவில் இருந்து உலகமெங்கும் சென்று சாதிக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. வேலூரில் உள்ள சிறிய விமான நிலையம் மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் விமானங்கள் இயக்க நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, மாநில செயலாளர் வெங்கடேசன், மாவட்ட தலைவர் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.


Next Story