பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்த மிதவை கப்பல்
பாம்பன் தூக்குப்பாலத்தை மிதவை கப்பல் கடந்து சென்றது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே பாம்பன் கடலின் நடுவே உள்ள ரெயில்வே தூக்குப்பாலத்தை கடந்து செல்வதற்காக கடந்த 2 வாரத்திற்கு முன்பு மராட்டிய மாநிலம் பெலப்பூர் துறைமுகத்தில் இருந்து வந்த மிதவை கப்பல் காத்திருந்தது. பாம்பன் குருசடை தீவு அருகே உள்ள கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதேபோல் மீன்பிடி படகுகளும் தூக்குப்பாலத்தை கடந்து செல்ல நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் பாம்பன் தூக்குப்பாலம் நேற்று திறக்கப்பட்டது. அதைதொடர்ந்து, 50 மீட்டர் நீளமும், 429 டன் எடையும் கொண்ட அந்த மிதவை கப்பல் அதிகாரிகள் வழிகாட்டுதலுடன் பாதுகாப்பாக தூக்குப்பாலத்தை கடந்து, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நோக்கி சென்றது.
இதே போல் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து அந்தமான் போர்ட் பிளேயர் துறைமுகம் செல்வதற்காக இந்திய கடற்படையின் ரோந்து கப்பல் ஒன்றும் தூக்குப்பாலத்தை கடந்து சென்றது. அதேநேரம் 10-க்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகுகளும் நாகப்பட்டினம் செல்வதற்காக கடந்து சென்றன. கப்பல்கள், படகுகள் அடுத்தடுத்து தூக்குப்பாலத்தை கடந்து சென்றதை ரோடு பாலத்தில் நின்றபடி ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.