மதுரை ஆற்றில் வெள்ளப்பெருக்கு எதிரொலி: வைகை அணையில் உபரிநீர் திறப்பு நிறுத்தம்


மதுரை ஆற்றில் வெள்ளப்பெருக்கு எதிரொலி:  வைகை அணையில் உபரிநீர் திறப்பு நிறுத்தம்
x

மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் எதிரொலியாக, வைகை அணையில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

தேனி

வைகை அணை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்தது. இதன் காரணமாக கடந்த 2 வாரங்களுக்கு மேலாக அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் பெய்த மழையால் வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் சோத்துப்பாறை, மஞ்சளாறு, வைகை அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தண்ணீர் திறப்பு நிறுத்தம்

இதனால் மதுரையில் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் சென்றது. இதையடுத்து வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் விதமாக வைகை அணையில் இருந்து உபரிநீர் திறப்பது இன்று மதியம் திடீரென நிறுத்தப்பட்டது.

அணையில் இருந்து வினாடிக்கு 3,700 கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. மேலும் வைகை அணையின் நீர்மட்டத்தை 71 அடி வரை உயர்த்த பொதுப்பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர். அணையின் நீர்மட்டம் 71 அடியை எட்டும் பட்சத்தில் உபரிநீரை அதிகமாக ஆற்றில் திறக்காமல் பாசனக்கால்வாய் வழியாக திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வைகை அணை நீர்மட்டம் எந்த நேரத்திலும் 71 அடியை எட்டும் என்பதால் அணையின் நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


Next Story