மாஞ்சோலையில் 163 மி.மீ. மழை பெய்தது குற்றாலம்-மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. மாஞ்சோலை நாலுமுக்கு பகுதியில் அதிகபட்சமாக 163 மி.மீ. மழை பதிவானது. குற்றாலம் மற்றும் மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. மாஞ்சோலை நாலுமுக்கு பகுதியில் அதிகபட்சமாக 163 மி.மீ. மழை பதிவானது. குற்றாலம் மற்றும் மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நெல்லையில் நேற்று பகலில் வெயில் அடித்த நிலையில் மாலையில் மேகங்கள் திரண்டு மிதமான மழை பெய்தது.
நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை கொட்டியதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
மாஞ்சோலை நாலுமுக்கு பகுதியில் 163 மி.மீ.-ம், அங்குள்ள காக்காச்சி பகுதியில் 148 மில்லி மீட்டரும், ஊத்து பகுதியில் 157 மி.மீ.-ம் மழை பதிவானது.
மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு
இதனால் மணிமுத்தாறு அணையின் உள்பகுதியில் அமைந்திருக்கும் மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்கு சுற்றுலா பயணிகள் செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது.
மணிமுத்தாறு அருவி வழியாக வினாடிக்கு 1,608 கன அடி தண்ணீர் அணையில் வந்து சேருகிது. அணையில் இருந்து பாசனத்துக்கு 35 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 83.70 அடியாக உள்ளது.
பாபநாசம்- சேர்வலாறு
143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 93.70 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,017 கன அடியாகவும், வெளியேற்றம் 405 கன அடியாகவும் உள்ளது.
156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடிக்கும் மேலாக உயர்ந்து 104.75 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 31.75 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 43 கன அடியாகவும், வெளியேற்றம் 50 கன அடியாகவும் உள்ளது.
உச்சத்தை எட்டும் ராமநதி அணை
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி அணை நீர்மட்டம் 77 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 239 கன அடியாகவும், வெளியேற்றம் 100 கன அடியாகவும் உள்ளது.
84 அடி உயரம் கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 82 அடியை தொட்டு உச்சத்தை எட்டி உள்ளது. இதையடுத்து அணைக்கு வருகிற 185 கன அடி தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
72 அடி உயரம் கொண்ட கருப்பாநதி அணை நீரக்மட்டம் 62 அடியாக உள்ளது. அணைக்கு வருகிற 50 கன அடி தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டு உள்ளது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 81.25 அடியாக உள்ளது. அணைக்கு வருகிற 35 கன அடி தண்ணீர் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு உள்ளது. குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது.
குற்றாலத்தில் குளிக்க தடை
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழையால் குற்றாலம் அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஐந்தருவி, புலியருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து செல்கிறார்கள்.
தலையணையை மூழ்கடித்த வெள்ளம்
களக்காடு தலையணையை மூழ்கடித்தவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதற்கிடையே தலையணை பகுதியில் புதிய மின்கம்பம் நடுதல், ஒயர்கள் அமைத்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுவதால் நேற்று முதல் வருகிற 8-ந்தேதி வரையிலும் களக்காடு தலையணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
மழை அளவு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
பாபநாசம்-34, சேர்வலாறு-39, மணிமுத்தாறு-36.8, காக்காச்சி-148, மாஞ்சோலை நாலுமுக்கு-163, ஊத்து-157, அம்பை-13, சேரன்மகாதேவி-15, ராதாபுரம்-35, நாங்குநேரி-22, களக்காடு-7, மூலைக்கரைப்பட்டி-32, பாளையங்கோட்டை-54, நெல்லை-7.
கடனாநதி-20, ராமநதி-30, கருப்பாநதி-10, குண்டாறு-32, அடவிநயினார்-11, ஆய்க்குடி-19, செங்கோட்டை-34, தென்காசி-11, சங்கரன்கோவில்-1.