மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு


மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 15 Dec 2022 12:30 AM IST (Updated: 15 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

வருசநாடு அருகே உள்ள வெள்ளிமலை பகுதியில் கனமழையால் மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தேனி

தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள வெள்ளிமலை வனப்பகுதியில் இருந்து மூலவைகை ஆறு உற்பத்தியாகிறது. இது வைகை ஆற்றின் பிறப்பிடமாக உள்ளது. இந்த மூலவைகை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, மேகமலை, அரசரடி, பொம்மராஜபுரம், இந்திராநகர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக நேற்று அதிகாலை மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் ஆற்றில் செந்நிறத்தில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் யாரும் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று கரையோர கிராம மக்களுக்கு கடமலை-மயிலை ஒன்றிய நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகள் நீரில் மூழ்கி குடிநீர் மாசடைந்துள்ளது. எனவே குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என அந்தந்த ஊராட்சி நிர்வாகிகள் சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story