மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
வெள்ளிமலை வனப்பகுதியில் கனமழையால் மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மூலவைகை ஆறு
கடமலை-மயிலை ஒன்றியம் மூலவைகை ஆறு உற்பத்தியாகும் வெள்ளிமலை வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை இல்லை. அதன் காரணமாக மூலவகை ஆறு வறண்டு காணப்பட்டது. மேலும் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது.
இதனால் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவியது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக வெள்ளிமலை வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக கடந்த வாரம் மூலவைகை ஆற்றில் மீண்டும் நீர்வரத்து ஏற்பட்டது.
வெள்ளப்பெருக்கு
இந்நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிமலை வனப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதன்காரணமாக நேற்று மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
இதற்கிடையே வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து குடிநீர் மாசடைந்தது. எனவே வெள்ளப்பெருக்கு குறையும் வரை குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என அந்தந்த ஊராட்சி நிர்வாகிகள் சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கு காரணமாக கடமலைக்குண்டு கிராமத்தில் ஆற்றில் நடைபெற்று வந்த தடுப்பணை கட்டும் பணிகள் பாதிப்படைந்துள்ளது.