ஆறுகளில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்
கூடலூர் தொடர் கனமழையால், ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மாயாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் மூழ்கியதால், கூடலூர்-மசினகுடி இடையே 2-வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கூடலூர்,
கூடலூர் தொடர் கனமழையால், ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மாயாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் மூழ்கியதால், கூடலூர்-மசினகுடி இடையே 2-வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கனமழை நீடிப்பு
கூடலூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய கனமழை பெய்தது. இதனால் குனில், இருவயல், புத்தூர்வயல் ஆகிய இடங்களில் குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களில் வெள்ளம் தேங்கி நின்றது. வெள்ளம் வடியாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து சூறாவளி காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் வேருடன் முறிந்து விழுந்தது. இதனால் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இதைத்தொடர்ந்து கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது.
நேற்று காலை முதல் மழையின் தாக்கம் பரவலாக குறைந்தது. இதனால் மாயார் ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து தரைப்பாலம் வெளியே தெரிந்தது. இதைத்தொடர்ந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால், ஸ்ரீமதுரை, முதுமலை ஊராட்சி பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்தது.
அமைச்சர் ஆய்வு
பின்னர் மதியம் 2 மணிக்கு கூடலூர் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தொடர்ந்து மாயாறு ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து தரைப்பாலம் மூழ்கியது. இதைத்தொடர்ந்து கூடலூர்-மசினகுடி இடையே 2-வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதேபோல் கூடலூர் பகுதியில் உள்ள பாண்டியாறு உள்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இந்தநிலையில் கூடலூர் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், கலெக்டர் சா.ப.அம்ரித் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முன்னதாக நூலக கட்டிடம் இடிந்த இடத்தை பார்வையிட்டனர். பின்னர் புத்தூர்வயல் முகாமுக்கு சென்று, அங்கு இருந்தவர்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் துணிகளை அமைச்சர் வழங்கினார்.
நிவாரண உதவி
இதேபோல் ஓவேலி பேரூராட்சி ஹெல்லியில் மரம் விழுந்து உயிரிழந்த பெண் தொழிலாளி சுமதியின் குடும்பத்தினருக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வழங்கி ஆறுதல் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன், முன்னாள் எம்.எல்.ஏ திராவிட மணி, ஆர்.டி.ஓ. சரவணக்கண்ணன், கூடலூர் நகராட்சி தலைவர் பரிமளா, தாசில்தார் சித்தராஜ், ஓவேலி பேரூராட்சி தலைவர் சித்ராதேவி, ஒன்றிய தி.மு.க. செயலாளர் லியாகத் அலி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.