நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு


நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு
x

நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி,

கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்ததால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனிடையே மழையின் அளவு குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

பரிசல் இயக்க தடை

இதனிடையே நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்க தொடங்கியது. மாலை 6 மணி அளவில் நீர்வரத்து 57 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளை தண்ணீர் சூழ்ந்து செல்கிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க மாவட்ட கலெக்டர் சாந்தி தடை விதித்துள்ளார். மேலும் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.

மேட்டூர் அணை

இதற்கிடையே மேட்டூர் அணைக்கு நேற்று காலை 40 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடிநீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது.


Next Story