மலர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்


மலர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
x
திருப்பூர்


உடுமலை,தளி சுற்றுவட்டார பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாகும். இங்குள்ள விவசாயிகள் காய்கறிகள், தானியங்கள், கீரைகள் பலங்கள் மற்றும் நீண்ட கால சாகுபடி பயிர்களுக்கு அடுத்தபடியாக மலர்கள் சாகுபடியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மல்லிகை, முல்லை, ஜாதிமல்லி, ஜம்பங்கி, கோழிக்கொண்டை, செண்டு மல்லி, செவ்வந்தி உள்ளிட்ட மலர்களுக்கு ஆண்டு முழுவதும் வரவேற்பு இருந்து வருகிறது. இதன் காரணமாக ஒரு சில விவசாயிகள் மலர்கள் சாகுபடிகளையும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,

"ஒரே பயிரை மாற்றி மாற்றி சாகுபடி செய்து ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட மலர்கள் சாகுபடியில் ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளோம். கோழிக்கொண்டை பூ வாசம் இல்லா விட்டாலும் கண்ணைக் கவரும் விதத்தில் அழகாக இருப்பதால் மாலைகளில் துணை மலராக சூட்டப் பயன்படுகிறது. இந்த பூக்கள் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, ரோஜா வண்ணத்திலும் பூக்கின்றன. சிவப்பு ரோஜா மாலைகளில் இடையிடையே இப்பூக்களும் தொடுக்கப்பட்டு ரோஜா பூவின் தோற்றத்தையும், அந்தஸ்தையும் பெற்று விடுகின்றது. கோழி கொண்டை மலர்கள் சாகுபடி செய்ய செலவு மிகவும் குறைவு. மேலும் விதைத்த 40 வது நாளில் பூக்கும் நிலையை அடைந்து விவசாயிக்கு போதிய வருமானம் தரும் பயிராக விளங்குகிறது. சுமார் இரண்டு மாதம் வரை கோழி கொண்டை பூக்கள் பலன் தரக்கூடியது. ஒவ்வொரு வாரமும் குறைந்த பட்சம் 20 கிலோவும், அதிகபட்சம் 60 கிலோ வரையும் பூக்கள் கிடைக்கும். இதனால், குறைந்தபட்சமாக 600 முதல் அதிகட்சமாக ரூ.2 ஆயிரம் வரை நாள் ஒன்றுக்கு வருமானம் கிடைக்கும். சீசனுக்கு தகுந்தவாறு பூக்களுக்கு விலை நல்ல விலை கிடைக்கும் என்பதால் படிப்படியாக மலர்கள் சாகுபடி பரப்பையும் அதிகரிக்க முடிவு செய்து உள்ளோம்" இவ்வாறு தெரிவித்தனர்.


Next Story