ராமநாதபுரத்தில் பூக்கள் விலை குறைந்தது


ராமநாதபுரத்தில் பூக்கள் விலை குறைந்தது
x

முகூர்த்த நாட்கள் இல்லாததால் ராமநாதபுரத்தில் அனைத்து வகை பூக்களின் விலை குறைந்தது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாததால் ராமநாதபுரத்தில் அனைத்து வகை பூக்களின் விலை குறைந்தது.

விழா நாட்கள்

தமிழகம் முழுவதும் கடந்த மாதம் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை தொடர்ந்து மல்லிகை பூ, பிச்சிப்பூ, கனகாம்பரம், ரோஜா உள்ளிட்ட அனைத்து வகை பூக்களும் பல மடங்கு விலை உயர்ந்து இருந்தது. தீபாவளி பண்டிகை முடிந்த பின்பு கந்தசஷ்டி, சூரசம்கார விழா தொடங்கியதால் பூக்களின் விலை அதே நிலையிலேயே இருந்து வந்தது.

இந்த நிலையில் தற்போது கந்த சஷ்டி விழாவும் முடிவடைந்து விட்டதால் தமிழகம் முழுவதும் அனைத்து வகை பூக்களின் விலைகளும் சற்று விலை குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது. ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள பூ மார்க்கெட்டிலும் அனைத்து வகை பூக்களும் சற்று விலை குறைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். குறிப்பாக பெண்கள் அதிகம் விரும்பும் மல்லிகைப்பூ, கனகாம்பரம், பிச்சிப்பூ உள்ளிட்ட பூக்களின் விலை சற்று குறைந்துள்ளதால் பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் பூக்களை வாங்கி சென்றாலும் விசேஷ நாட்கள் மற்றும் கோவில் திருவிழாக்கள் எதுவும் இல்லாததால் பூக்கள் விற்பனை குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

விலை குறைந்தது

இதுகுறித்து ராமநாதபுரம் அரண்மனை சாலையில் உள்ள பூ வியாபாரி மணிகண்டன் கூறியதாவது:-

தற்போது கோவில் திருவிழா மற்றும் விசேஷ நாட்கள் எதுவும் இல்லாததால் அனைத்து வகை பூக்களின் விலை குறைந்துவிட்டது. 1 கிலோ மல்லிகைப்பூ 1,400-ல் இருந்து ரூ.800 ஆக உள்ளது. பிச்சிப்பூ 1,800-ல் இருந்து தற்போது ரூ.400 ஆக உள்ளது. கனகாம்பரம் ரூ.2,500-ல் இருந்து ரூ.1000-ம் ஆக விலை குறைந்துள்ளது. ரோஜா ரூ.400-க்கு விற்பனையாகிறது. இவ்வாறு அவர் கூறினார். அய்யப்ப பக்தர்கள் மாலை அணியும் சீசன் இன்னும் 10 நாட்களில் தொடங்க உள்ளதால் கார்த்திகை மாதம் பிறந்த பின்னர் அனைத்து வகை பூக்களும் சற்று விலை உயர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Next Story