பூக்களின் விலை குறைந்தது
பூக்களின் விலை குறைந்தது
திருப்பூர்
கடந்த ஒரு மாதமாக பனிப்பொழிவு அதிகமாக இருந்த நிலையில் வெளியூரில் இருந்து திருப்பூர் பூ மார்க்ெகட்டுக்கு வரக்கூடிய பூக்களின் வரத்து அடியோடு குறைந்தது. இதனால் சராசரி நாட்களில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.300-ல் இருந்து 500 வரைக்கும் விற்பனை செய்யப்படும் நிலையில் கடந்த சில வாரங்களாக கிலோ ரூ.1400-ல் இருந்து ரூ.2800 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி இதன் விலை தாறுமாறாக அதிகரித்தது. பொங்கல் நாளில் அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் முல்லை ரூ.2800, ஜாதிமல்லி, காக்கடா ஆகியவை தலா ரூ.1400 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டன.
தற்போது பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில் உச்சத்தில் இருந்த பூக்களின் விலை குறைந்து வருகிறது. குறிப்பாக கடந்த 3 தினங்களாக பூக்களின் விலை வேகமாக குறைந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் முல்லைப்பூ ரூ.1400, ஜாதிமல்லி ரூ.1000, காக்கடா ரூ.400, அரளி ரூ.240, செவ்வந்தி ரூ.100, பட்டுப்பூ ரூ.120, சம்பங்கி ரூ.140 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நேற்று மார்க்கெட்டில் அனைத்து வகை பூக்களின் வரத்து சுமார் 12 டன் இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். பூக்களின் விலை குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.