தேனியில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
தேனியில் தீபாவளி பண்டிகையையொட்டி பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
தேனி அருகே கோட்டூர், சீலையம்பட்டி, உப்புக்கோட்டை, வாழையத்துப்பட்டி, பாலார்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மல்லிகை, முல்லை, ஜாதிப்பூ, சம்பங்கி, கனகாம்பரம், செண்டுப்பூ உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
இப்பகுதியில் விளையும் பூக்கள் மொத்தமாக தேனி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக பூக்கள் விளைச்சல் அதிகரித்ததால் மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் பூக்கள் வரத்தானது. ஆனால் விலை குறைவாக இருந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இந்தநிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி பூக்கள் வாங்க பூ மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் குவிந்தனர். இதனால் தேவை அதிகரித்து பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதன்படி, தேனி பூமார்க்கெட்டில் கடந்த வாரம் ரூ.500-க்கு விற்ற ஒரு கிலோ மல்லிகைப்பூ, நேற்று ரூ.1,300-க்கு விற்பனையானது. இதேபோல் ஜாதிப்பூ கிலோ ரூ.900, முல்லை ரூ.1,000, சம்பங்கி ரூ.70, அரளி ரூ.250, துளசி ரூ.20, செண்டுப்பூ ரூ.40, கோழிக்கொண்டை ரூ.60, ரோஜா ரூ.50 என விற்பனை செய்யப்பட்டது.