வேலூர் மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை
குடியரசு தினத்தையொட்டி வேலூர் மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பாதுகாப்பு ஏற்பாடுகள்
இந்திய குடியரசு தினத்தன்று வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வேலூர் கோட்டை கொத்தளம் மற்றும் நேதாஜி விளையாட்டு அரங்கில் தேசியக் கொடியை ஏற்ற உள்ளார்.
இதனையொட்டி மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் மற்றும் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு 6 மாநில எல்லை சோதனை சாவடிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் 58 இடங்களில் வாகன தணிக்கையும், அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் தணிக்கை மேற்கொள்ள போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டிரோன்கள் பறக்க தடை
மக்கள் அதிகம் கூடும் இடங்களான வேலூர் கோட்டை, மத வழிப்பாட்டு தலங்கள், காட்பாடி ரெயில் நிலைய சந்திப்பு, குடியாத்தம் ரெயில் நிலையம், வேலூர் புதிய, பழைய பஸ் நிலையம், குடியாத்தம் புதிய, பழைய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, நாச வேலை தடுப்பு குழுவினர் மூலம் சோதனை நடத்த உத்திரவிடப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு இன்றும், நாளையும் வேலூர் மாவட்டத்தில் டிரோன்கள் உள்ளிட்டவை பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் உள்ளிட்டவை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.