குப்தா நதியின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும்
வேப்பனப்பள்ளி அருகே ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், குப்தா நதியின் குறுக்கே மேம்பாலம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வேப்பனப்பள்ளி அருகே ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், குப்தா நதியின் குறுக்கே மேம்பாலம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கலெக்டர் அலுவலகத்தில் மனு
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம், மணவாரனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன முனியப்பன் கொட்டாயை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- எங்கள் பகுதியில், 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்கள் கிராமத்திற்கு, கங்கமடுகுவில் இருந்து குப்தா நதியை கடந்து செல்ல வேண்டும். கடந்த ஒரு மாதமாக குப்தா நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டாக மாணவ-மாணவிகள், பொதுமக்கள் ஆபத்தான முறையில் நதியை தண்ணீரில் இறங்கி சென்று வருகிறோம்.
மேம்பாலம்
இதனால் மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே உள்ளனர். கர்ப்பிணிகள் மருத்துவ வசதி இல்லாமல் தவிக்கின்றனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட நதியை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. பல மாதங்களாக கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். மாணவ-மாணவிகள் நலன் கருதி குப்தா நதி குறுக்கே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.