தீவன உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி
காழியப்பநல்லூர் ஊராட்சியில் தீவன உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.
பொறையாறு:
பொறையாறு அருகே காழியப்பநல்லூர் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் தீவன உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு செம்பனார்கோவில் வேளாண்மை உதவி இயக்குனர் தாமஸ் தலைமை தாங்கினார். அட்மா தொழில்நுட்ப மேலாளர் ரேகா முன்னிலை வகித்தார். தொழில்நுட்ப உதவி மேலாளர் சிவசஞ்சீவி வரவேற்றார். தில்லையாடி கால்நடை உதவி டாக்டர்.சரத்குமார் கலந்து கொண்டு கால்நடைகள் பராமரிப்பு குறித்தும், அவைகளுக்கு வழங்கப்படும் தீவனம் குறித்தும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 'கால்நடைகளுக்கு நேப்பியர் தீவனப்புல் 3 பங்கும், வேலிமசால் 1 பங்கும் என்ற விதத்தில் கலந்து வழங்கலாம். பச்சை நீலப்பாசியை கால்நடைகளுக்கு ஒரு நாளைக்கு 2 முதல் 2½ கிலோ வரை வழங்கலாம். இந்த பச்சை நீலப்பாசி நாகை அருகே சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கிடைக்கும். கால்நடைகளுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை தடுப்பூசி போடப்படுகிறது. இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார். இதில் உதவி வேளாண் அலுவலர் உதயசூரியன் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் செல்வகுமரன் நன்றி கூறினார்.