எடப்பாடி பழனிசாமி அணியை தொடர்ந்து புதிய நீதிக்கட்சியிடம் ஓ.பன்னீர்செல்வமும் ஆதரவு கேட்டார்


எடப்பாடி பழனிசாமி அணியை தொடர்ந்து புதிய நீதிக்கட்சியிடம் ஓ.பன்னீர்செல்வமும் ஆதரவு கேட்டார்
x

எடப்பாடி பழனிசாமி அணியினரை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வமும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் புதிய நீதிக்கட்சியிடம் ஆதரவு கேட்டார்..

சென்னை,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கோரி எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, பென்ஜமின், கோகுல இந்திரா ஆகியோர் புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகத்தை நேற்று முன்தினம் சந்தித்தனர்.

அப்போது, அவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதால், பா.ஜ.க. வழியே என்னுடைய வழி என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

ஓ.பன்னீர்செல்வம்

இந்த சூழ்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், கு.ப.கிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர் உள்பட நிர்வாகிகள் சென்னை தியாகராயநகரில் உள்ள புதிய நீதிக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஏ.சி.சண்முகத்தை சந்தித்து பேசினர். அப்போது, தங்கள் அணியினர் சார்பில் களம் இறக்கப்பட உள்ள வேட்பாளருக்கு ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

மோடி விருப்பம்

பின்னர், ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. நிலைப்பாட்டை ஏற்கனவே அறிவித்து இருந்தேன். வேட்பாளரை கூடிய விரைவில் அறிவிக்க இருக்கிறோம். அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும், பிரிந்து இருப்பவர்கள் மீண்டும் ஒன்றாக சேர வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதுதான் எங்களின் நிலைப்பாடு.

அ.தி.மு.க.வினர் ஒன்றுபட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்றுதான் பிரதமர் நரேந்திர மோடியும் விரும்புகிறார்.

எம்.ஜி.ஆர். மாளிகை நோக்கிதான் எனது கார் செல்லும் என்று சட்டமன்றத்தில் சொன்னேன். கமலாலயம் சென்றுவிடாதீர்கள் என்று உதயநிதி ஸ்டாலின் சொன்னார். அப்போது, எம்.ஜி.ஆர். மாளிகை நோக்கி தான் செல்லும் என்று சொன்னேன். மற்ற இடங்களுக்கு செல்ல மாட்டேன் என்று சொல்லவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பெரிய மனுஷன்

இதையடுத்து, பிரதமர் மோடி அ.தி.மு.க.வின் 2 அணிகளும் இணையவேண்டும் என்று கூறும் சூழ்நிலையில், அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை என்று எடப்பாடி பழனிசாமி அணியினர் கூறியிருக்கிறார்களே.. என்ற கேள்விக்கு, "பெரிய மனுஷன் நல்லது சொன்னால் கேட்க வேண்டுமல்லவா..." என்று ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.

இணைப்பு பாலமாக...

ஏ.சி.சண்முகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு தரவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார். எம்.ஜி.ஆர். கட்சி, சின்னம் முடங்கிவிடக்கூடாது. எனவே 2 பேரும் ஒன்றாக இணைய வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்தினேன்.

இதுதான் அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பம். 2 பேரையும் இணைப்பதற்கான வழி இருந்தால், அதற்கான பாலமாக நான் செயல்படுகிறேன் என்று கூறினேன். எனவே வேட்பாளரை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்டுக்கொண்டேன்.

நானும் எ.ஜி.ஆர். தொண்டன் என்ற முறையில், வாய்ப்பு கிடைத்தால் 2 பேரையும் இணைக்க பேச்சுவார்த்தை நடத்துவேன். தேசிய ஜனநாயக கூட்டணியில் என்ன முடிவு எடுத்தாலும், பா.ஜ.க. தலைமையில் புதிய நீதிக்கட்சி செயல்படும். எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைய ஓ.பன்னீர்செல்வம் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் 2 அல்லது 3 தினங்களில் நல்ல முடிவு வரும். அ.தி.மு.க. இணைப்பு தொடர்பாக வாய்ப்பு கிடைத்தால் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பேன். கடந்த முறை போன்று இந்த முறையும் அ.தி.மு.க. அணிகள் இணையும். தேசிய ஜனநாயக கூட்டணியை ஒற்றுமையான வடிவத்துக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். இந்த இடைத்தேர்தல் மட்டுமல்ல, இனி வரும் தேர்தல்களிலும் நான் 99.99 சதவீதம் போட்டியிட மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story