உணவு உற்பத்திக் கூடங்களில் கேள்விக்குறியாகும் சுகாதாரம்
உணவகங்கள், இனிப்பகங்கள் போன்றவற்றுக்கான உணவு உற்பத்திக் கூடங்களில் பல இடங்களில் சுகாதாரம் கேள்விக்குறியாகும் நிலையில் கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உணவகங்கள், இனிப்பகங்கள் போன்றவற்றுக்கான உணவு உற்பத்திக் கூடங்களில் பல இடங்களில் சுகாதாரம் கேள்விக்குறியாகும் நிலையில் கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓட்டல்களை நம்பி
பணமே வாழ்க்கை என்றாகி விட்ட இன்றைய சூழ்நிலையில் பலரும் பணத்துக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருக்கின்றனர். இதனால் குடும்பத்துக்காக நேரம் ஒதுக்க முடியாத நிலையே உள்ளது. ஒரு குடும்பம் பொருளாதாரத்தில் தன்னிறைவை அடைய வேண்டுமானால் கணவன்-மனைவி இருவரும் சம்பாதித்தாக வேண்டிய கட்டாயம் பல குடும்பங்களில் ஏற்படுகிறது.
இதனால் அவர்களுக்கு உணவு சமைக்கக்கூட நேரமில்லாமல் ஓட்டல்களை நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது பல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் இதுபோன்றவர்களைக் குறி வைத்து செயல்படுகின்றன. அவர்கள் விரும்பும் ஓட்டல்களிலிருந்து உணவை வாங்கி வீட்டில் கொண்டு வந்து கொடுக்க இந்த நிறுவனங்கள் தயாராக உள்ளன.
சுகாதாரமற்ற உணவுகள்
இந்தநிலையில் ஒருசில உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகளால் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு பலவிதமான நோய் பாதிப்புகள் ஏற்படுவதற்கு சுகாதாரமற்ற உணவுகள் காரணமாகிறது. மேலும் தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் வீட்டில் அம்மா செய்யும் அதிரசம், முறுக்கு, சீடை, முந்திரிக்கொத்து போன்றவையெல்லாம் தற்போது பார்க்க முடிவதில்லை. இனிப்பகங்களில் பல வண்ணங்களில் பல வடிவங்களில் விதம் விதமான சுவைகளில் கிடைக்கும் இனிப்பு, கார வகைகள் தான் தீபாவளிப் பலகாரங்களாக வீடு வந்து சேர்கின்றன.
இதுபோன்ற இடங்களில் சுகாதாரமான முறையில் தான் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறதா? என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. அவ்வப்போது உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சுகாதாரமான முறையில் உணவுப் பொருட்களை தயாரிக்க வலியுறுத்துகிறார்கள். மேலும் தவறு செய்யும் நிறுவனங்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கிறார்கள். ஆனால் அது போதுமானதாக இல்லை.
கண்காணிப்பு கேமரா
இப்போதைய நிலையில் உணவு தயாரிப்புக்கூடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது மிகவும் அவசியமாகும். ஏனென்றால் ஒருசில இடங்களில் வேலை செய்பவர்கள் வேண்டுமென்றே எச்சில் துப்புதல், சிறுநீர் கழித்தல், உணவுப் பொருட்களை தரையில் போட்டு தேய்ப்பது, காலால் மிதிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது குறித்த வீடியோக்கள் பலவும் இணையத்தில் உலா வருகிறது. குறிப்பாக இதுபோன்ற செயல்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. இப்போது பல உணவகங்களில் ஆட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் வட மாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
அவர்களுக்கு பணிச்சுமை, குடும்பத்தைப் பிரிந்ததால் ஏற்படும் மன அழுத்தம் போன்றவற்றால் உளவியல் சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். மேலும் முதலாளியின் மேல் உள்ள கோபத்தை இதுபோல உணவுப் பண்டங்களின் மீது காட்டுவதும் தெரியவந்துள்ளது. மேலும் ஒருசில உணவகங்களில் அழுகிய காய்கறிகள், கெட்டுப்போன மீன், சிக்கன் போன்ற தரமற்ற பொருட்களை உணவு தயாரிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். எனவே உணவு தயாரிப்புக்கூடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டும். அந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை உரிமையாளர் தொடர்ந்து பார்ப்பதுடன், தேவைப்படும் பட்சத்தில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். இதன் மூலம் சுத்தமான, சுகாதாரமான உணவுகள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய முடியும்'
இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.