மக்களுக்கு உணவு அளிக்கும் பொறுப்பு பதப்படுத்தும் துறைக்கு உள்ளது
மக்களுக்கு உணவு அளிக்கும் பொறுப்பு பதப்படுத்தும் துறைக்கு உள்ளது என மத்தியமந்திரி பசுபதி குமார் பராஸ் பேசினார்.
தஞ்சாவூர்;
மக்களுக்கு உணவு அளிக்கும் பொறுப்பு பதப்படுத்தும் துறைக்கு உள்ளது என மத்தியமந்திரி பசுபதி குமார் பராஸ் பேசினார்.
பட்டமளிப்பு விழா
தஞ்சை மேலவஸ்தாசாவடியில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் பட்டமளிப்பு விழா நேற்றுமாலை நடந்தது. விழாவில் மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை மந்திரி பசுபதி குமார் பராஸ் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
உலக அளவில் இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது. இதில், உணவு பதப்படுத்தும் துறையில் ஏராளமான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. பால், சிறுதானியம் உற்பத்தியிலும், கால்நடை வளர்ப்பிலும் நம் நாடு முன்னிலையில் உள்ளது. இதேபோல, உணவு உற்பத்தியில் 2-ம் இடத்தில் உள்ளோம். சமீப காலமாக, உணவு பதப்படுத்துதல் துறை அதிக வளர்ச்சியையும், அதிக லாபத்தையும் கண்டுள்ளது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் உலக உணவு வர்த்தகத்தில் அதன் பங்கு அதிகரித்து வருகிறது.
ஐ.நா.மன்றம்
உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது என்றும், மக்களுக்கு உணவு அளிக்கும் பொறுப்பு உணவு பதப்படுத்தும் துறைக்கு இருப்பதாகவும் ஐ.நா. மன்றம் தெரிவித்துள்ளது. இந்தச் சவாலான சூழ்நிலையில் மாணவர்களுக்கான பொறுப்பு அதிகரித்துள்ளது மட்டுமல்லாமல், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். மாணவர்கள் புத்தாக்கச் சிந்தனையுடன் முன்னோக்கி வருவது மட்டுமல்லாமல், உணவு பதப்படுத்துதல் துறையின் வளர்ச்சிக்காகவும் பாடுபட வேண்டும்.உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பைக் கொண்ட வலுவான தேசத்தைக் உருவாக்க நமது பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். அவரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க மாணவர்களாகி நீங்கள் உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் எம். கிருஷ்ணன், தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவன ஆட்சிக் குழுத் தலைவர் சோதி ஆகியோர் பேசினர்.விழாவில் 50 இளநிலைப் பட்ட மாணவர்களுக்கும், 29 முதுநிலைப் பட்ட மாணவர்களுக்கும், 9 முனைவர் பட்ட மாணவர்களுக்கும் பட்டம் வழங்கப்பட்டது. முன்னதாக நிறுவன இயக்குனர் (பொறுப்பு) லோகநாதன் வரவேற்றார். முடிவில் பதிவாளர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.