கோவில்களில் வழங்கும் அன்னதானம் மனநிறைவாக இருக்கிறதா
தமிழக கோவில்களில் பக்தர்களுக்கு தினமும் வழங்கப்படும் அன்னதானம் மனநிறைவாக இருக்கிறதா? என்பது குறித்து பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருவாரூர்;
தமிழக கோவில்களில் பக்தர்களுக்கு தினமும் வழங்கப்படும் அன்னதானம் மனநிறைவாக இருக்கிறதா? என்பது குறித்து பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கோவில்களில் அன்னதானம்
தானத்தில் சிறந்தது அன்னதானம். போதும் என்ற மனப்பான்மையை அளிப்பது அன்னதானம் மட்டுமே. உண்மையில் இது வெறும் தத்துவமல்ல. இதனை நம் அனுபவ பூர்வமாகவே பார்க்க முடியும். பசியோடு இருப்பவருக்கு உணவளிப்பது சிறந்த மனித பண்புகளில் ஒன்றாக கருதப்படுகிறதுஆன்மிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு உணவு அளிப்பது நம் கலாசாரத்தில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. மேலைநாடுகளில் உணவு வங்கிகள் மூலமும் உறையுள்கள் மூலமும் உணவு இல்லாதவர்களுக்கு வழங்கப்படுகிறது.
ரூ.35 செலவு
அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 2002-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ந்தேதி மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் அன்னதான திட்டத்தை அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். ஆன்றோர்கள், சான்றோர்கள், பக்தர்கள் வரவேற்பை பெற்று படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது 754 கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது.குறைந்தது 25 நபர்களுக்கும், அதிக பட்சமாக 200 நபர்களுக்குமாக அன்னதானம் வழங்கப்படுகிறது. ஒரு இலைக்கு ரூ.35 செலவிடப்படுகிறது. தொடர்ந்து 2012-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி ஸ்ரீரெங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில், பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
நாள் முழுவதும் உணவு
தமிழக சட்டசபையில் 2021-2022-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கையின் போது திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோவில் ஆகிய 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ந்தேதி தொடங்கி வைத்தார். அதன்படி காலை 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை பக்தர்களுக்காக உணவு பரிமாறப்படுகிறது.தற்போது ராமநாதசுவாமி கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில்களில் நாள்முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் 22 கோவில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நாள்தோறும் 50 பேர் முதல் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் தினமும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.இந்த திட்டம் கடந்த 20 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பக்தர்கள் இடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. அதன்படி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நாள்தோறும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.திருவாரூர்மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் அன்னதான திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது? சாப்பிடும் பக்தர்களுக்கு மனநிறைவு கிடைக்கிறதா? என்று அறிந்து கொள்வதற்காக கோவில்களில் சென்று பார்த்த போது பக்தர்கள் தெரிவித்த கருத்துக்கள் விவரம் வருமாறு:-
உணவு நன்றாக உள்ளது
திருவாரூர் தியாகராஜர் ேகாவிலில் அன்னதானம் சாப்பிட்ட காக்காயியம்மாள் கூறுகையில்,
எனது கணவர் இறந்து 30 ஆண்டுகள் ஆகி்றது. எனக்கு குழந்தைகள் இல்லாத நிலையில் ஆதரவின்றி வாழ்ந்து வருகிறேன். இதனால் அதிகமாக கோவில்களுக்கு செல்வேன். சாமியை கும்பிட்டு விட்டு அன்னதானம் சாப்பிட்டு தான் செல்வேன். எனது பசியினை போக்குவது அன்னதானம் திட்டம் தான். சாப்பாடு நன்றாக இருக்கிறது. தொடர்ந்து அன்னதானம் வழங்க வேண்டும் என கூறினார்.
தேவர்கண்டநல்லூரை சேர்ந்த வீரையன்:
நான் பாதுகாவலராக வேலை பார்த்து வருகிறேன். வேலை இல்லாத நாட்களில் கோவிலுக்கு வருவேன். இங்கு வரும் போது அன்னதானம் சாப்பிடுவேன். இன்றைக்கு வடை, பாயசத்துடன் சாப்பாடு மிக அருமையாக இருந்தது. கோவிலுக்கு வருவதால் மனதுக்கு அமைதியும், பசிக்கு ருசியான உணவு கிடைக்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தி வரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.
ஆலங்குடி குருபகவான் ேகாவிலில் அன்னதானம் சாப்பிட்ட சுவாமிமலை இன்னம்பூரை சேர்ந்த கஸ்தூரி கூறுகையில்,ஆலங்குடி குருபகவான் கோவிலில் சாப்பாடு மிக அருமையாக இருந்தது.நல்லமுறையில் உணவு வழங்கினார்கள். தமிழக அரசு இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என கூறினார்.
முகூர்த்த நாட்கள்
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் அன்னதான திட்ட சமையலராக பணிபுரியும் நளினி கூறுகையில், இங்கு தினமும் 100 பேருக்கு மதிய உணவு தயார் செய்து வழங்குகிறோம். சாதத்துக்கு சாம்பார், ரசம், மோர் மற்றும் ஒரு கூட்டு, ஊறுகாய் வழங்கப்படுகிறது. சாதாரண ஏழை, எளிய மக்கள், ஆதரவற்றோர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் என தினமும் மதிய உணவு சாப்பிட வருவர். சமைக்கப்பட்ட உணவு அனைத்தும் தீர்ந்துவிடும். முகூர்த்த நாட்களில் சாப்பிட வருபவர்கள் எண்ணிக்கை சிறிது குறையும் என கூறினார்.
மன்னார்குடியை சேர்ந்த கோபால் கூறுகையில், நான் அடிக்கடி இங்கு மதிய உணவு சாப்பிட வருவேன். உணவு நன்றாகவும் சுவையாகவும் இருக்கும். நிறைவாக சாப்பிட்டு செல்கிறேன் என கூறினார்.தேவங்குடியைச் சேர்ந்த லதா கூறுகையில், மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்தில் சாம்பார், ரசம், பொரியல் என அனைத்தும் நன்றாகவும் சூடாகவும் உள்ளது. வீட்டில் சமைத்த உணவு போல் உள்ளதால் அனைவரும் ருசித்து சாப்பிடுகிறார்கள்.வலங்கைமான்
வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட அபூர்வம் கூறுகையில், ஆதரவற்ற எனக்கு மாரியம்மன் கோவிலில் மதியம் வழங்கப்படும் உணவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. என்னை போன்ற வயதானவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்படுவதால் பலர் பசியாறுகிறார்கள். இந்த கோவிலில் அடிக்கடி சாப்பிட்டு வருகிறேன். குறையில்லாமல் நல்ல விதமாக உணவு வழங்கப்படுகிறது என கூறினார்.