உணவு தானிய உற்பத்தி 4¼ லட்சம் டன் இலக்கு


உணவு தானிய உற்பத்தி 4¼ லட்சம் டன் இலக்கு
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு உணவு தானிய உற்பத்தி 4¼ லட்சம் டன் ஆக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு உணவு தானிய உற்பத்தி 4¼ லட்சம் டன் ஆக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உணவு தானிய உற்பத்தி

ராமநாதபுரம் மாவட்டத்தில் இயல்பான மழையளவு 827 மி.மீ. ஆகும். இதுவரை 310 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்த மாத இயல்பான மழையளவு 49.50 மி.மீ ஆகும். இதில் இதுவரை 14 மி.மீ மட்டுமே பெய்துள்ளது. இதுவரை பெய்த மழையை பயன்படுத்தி விதைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

நெல் 52 ஆயிரம் எக்டர் பரப்பிலும், சிறுதானியங்கள் 2 ஆயிரத்து 300 எக்டர் பரப்பிலும், பயறு வகைப்பயிர்கள் 350 எக்டரிலும் விதைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவு தானிய உற்பத்தி இலக்கு 4 லட்சத்து 26 ஆயிரம் டன் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சான்று பெற்ற விதைகள் இருப்பு

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாலும், பருவமழைக்கு முன்னதாகவே வைகை தண்ணீர் வந்து நீர்நிலைகள் நிரம்பி உள்ளதாலும் இந்த இலக்கு எளிதாக எட்டப்படும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்பங்கள், தரமான விதை தேர்வு, விதை நேர்த்தி, உர நிர்வாகம், பயிர் பாதுகாப்பு போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்திலுள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் நெல், சோளம், கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, உளுந்து, நிலக்கடலை ஆகிய பயிர்களில் சான்றுபெற்ற விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

உரங்கள்

குறிப்பாக நெல்லில் கோயம்புத்தூர்-51, ஆடுதுறை 45 உள்ளிட்ட ரகங்கள் அனைத்தும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகளை வேளாண்மை விரிவாக மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

அதேபோல உரங்களை பொறுத்தவரை யூரியா, டிஏபி, பொட்டாஷ், கலப்பு உரங்கள், சூப்பர் பாஸ்பேட் போன்றவை போதிய அளவு இருப்பு உள்ளது. இந்த தகவலை ராமநாதபுரம் வேளாண் இணை இயக்குனர் கண்ணையா தெரிவித்தார்.



Next Story