விழுப்புரம் நகர ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை பிளாஸ்டிக் பைகள், காலாவதியான பொருட்கள் பறிமுதல்
விழுப்புரம் நகர ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பிளாஸ்டிக் பைகள், காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் மாவட்ட நியமன அலுவலர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின் ராஜரத்தினம், பிரசாத், பத்மநாபன், அன்புபழனி, கொளஞ்சி, மோகன், கதிரவன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று மாலை விழுப்புரம் நகர பகுதியில் உள்ள ஓட்டல்கள், பெட்டிக்கடைகள், சாலையோர உணவகங்கள், பழக்கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கவர்கள், குவளைகள், பேப்பர்கள் போன்றவை பயன்படுத்தப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர். நகரில் உள்ள 25-க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில் 100 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு 13 கடைகளுக்கு நோட்டீசு வழங்கி தலா ரூ.2 ஆயிரத்தை அபராதமாக விதித்தனர்.
மேலும் கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த கெட்டுப்போன மற்றும் காலாவதியான உணவுப்பொருட்களான பிரட், வாழைப்பழங்கள், ஐஸ்கிரீம், கோதுமை மாவு, மைதா மாவு என 50 கிலோ எடையுள்ள பொருட்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டது.