கருப்பட்டி தயாரிக்கும் விவசாயிகளுக்கு உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் மிரட்டல்


தினத்தந்தி 24 Jun 2023 12:15 AM IST (Updated: 24 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் கருப்பட்டி தயாரிக்கும் விவசாயிகளுக்கு உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் மிரட்டல் விடுப்பதாக கலெக்டரிடம்புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் உண்மையான கருப்பட்டி தயாரிக்கும் விவசாயிகளை உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் மிரட்டும் வகையில் செயல்பட்டு வருவதாக, கலெக்டர் செந்தில்ராஜிடம் பரபரப்பு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருப்பட்டி

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் பேசும் போது, மாவட்டம் முழுவதும் பதநீர் மற்றும் கருப்பட்டியில் சர்க்கரை கலப்படம் செய்வதை தடுக்க வேண்டும். பதநீரில் கலப்படத்தை கண்டறியும் எந்திரத்தை உருவாக்க வேண்டும். கலப்படம் செய்பவர்களை விட்டு விட்டு உண்மையான பதநீர் கருப்பட்டி, கற்கண்டு தயார் செய்யும் விவசாயிகளை மிரட்டும் வகையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். கலப்படத்தை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தரமான கருப்பட்டி என்று போலியாக சான்று கொடுக்கப்பட்டு இருக்கிறது. விஷக் கள் இறக்குவதாக கூறி பனைத் தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு போடுவதை போலீசார் நிறுத்த வேண்டும்.

சித்த மருந்து

மத்திய அரசு மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கள் உணவு பட்டியலில் உள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் கள் போதைப் பொருள் பட்டியலில் இருக்கிறது. கள் சித்த மருந்தாகும். இதனை உணவு பொருள் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும்' என்று கூறினர்.

நடவடிக்கை

இதற்கு பதில் அளித்து கலெக்டர் செந்தில்ராஜ் பேசும் போது, பதநீர் மற்றும் கருப்பட்டியில் கலப்படம் செய்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கலப்பட தடை சட்டத்தில் திருத்தங்கள் செய்ய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வார்கள். உண்மையான கருப்பட்டி தயாரிக்கும் விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுக்காமல் இருக்க அறிவுறுத்தப்படும். பனைத் தொழிலாளர்களை போலீசார் கெடுபிடி செய்யாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார்.


Next Story