உணவுபாதுகாப்பு உரிமம் இல்லாமல் இயங்கிய 2குடோன்களுக்கு சீல்வைப்பு


உணவுபாதுகாப்பு  உரிமம் இல்லாமல் இயங்கிய   2குடோன்களுக்கு சீல்வைப்பு
x
தினத்தந்தி 23 Nov 2022 12:15 AM IST (Updated: 23 Nov 2022 12:19 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் உணவுபாதுகாப்பு உரிமம் இல்லாமல் இயங்கிய 2குடோன்களுக்கு சீல்வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் இயங்கிய 2 குடோன்களுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் பெற்று தொழில் புரிய வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், உரிமம் வழங்கும் மேளா நடத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் பல உணவு தொழில் சார்ந்த நிறுவனங்கள் உரிமம் இன்றி தொழில் செய்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சக்திமுருகன், காளிமுத்து ஆகியோர் அடங்கிய குழுவினர் தூத்துக்குடி துறைமுக சாலையில் உள்ள குடோன்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

சீல் வைப்பு

அப்பேது, அந்த பகுதியில் உள்ள 2 குடோன்களில் உணவு பாதுகாப்பு உரிமம் இன்றி உணவு பொருட்கள் வணிகம் நடந்து வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் 2 குடோன்களையும் மூடி சீல் வைத்தனர்.

மேலும் உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு துறையின் உரிமத்தை https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்ற பின்னரே, உணவு வணிகம் செய்ய வேண்டும். இனிவரும் நாட்களில், எந்த உணவு வணிகராவது, உணவு பாதுகாப்பு உரிமமின்றி உணவுத் தொழில் புரிவது ஆய்வின் போது கண்டறியப்பட்டால், நிறுவனம் அல்லது கடையை மூடி சீல் வைக்கப்படும். ஆகைால் உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் இல்லாமல் உணவு வணிகம் புரியும் உணவு சம்பந்தப்பட்ட வணிகர்கள், சட்ட நடவடிக்கைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, உடனடியாக உணவு பாதுகாப்பு உரிமத்தை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.


Next Story