சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பழனி, நத்தத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு வட்டார தலைவர் ராமநாதன் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் கந்தசாமி, ஓய்வூதியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் சுந்தரபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தனியாருக்கு வழங்கக் கூடாது என்றும், சத்துணவு ஊழியர்களிடமே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார துணைத்தலைவர் விமலா நன்றி கூறினார்.
இதேபோல் பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வட்டார துணைத்தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சரஸ்வதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது, பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் சமைத்து வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.