விழுப்புரத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தர்ணா
விழுப்புரத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை சிற்றுண்டி உணவை சத்துணவு மையம் மூலமாக வழங்க அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து அத்திட்டத்தை சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். தொடர்ந்து, இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்துவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் காலை சிற்றுண்டியை வழங்குவதை கைவிட வேண்டும், காலை சிற்றுண்டி உணவை சத்துணவு மையங்களில் சத்துணவு ஊழியர்கள் மூலமாக வழங்க வேண்டுமென வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய அளவில் அனைத்து மாவட்ட தலைநகரிலும் நேற்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
தர்ணா
அந்த வகையில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணிக்கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மலர், கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வுபெற்றோர் சங்க மாநில துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணைத்தலைவர் சாவித்திரி, ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நெடுமாறன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வுபெற்றோர் சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாநில துணைத்தலைவர் அபராஜிதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் மாவட்ட நிர்வாகிகள் சுந்தர்ராமன், வெங்கடேசன், அருணாச்சலம், சந்திரா, சித்ரா, ரவிஸ்ரீ, ஒன்றிய செயலாளர் தனஞ்செயன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் தேவதாஸ் நன்றி கூறினார்.