சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
கடலூர்;
சத்துணவு திட்டத்தில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நடைமுறைப்படுத்திட வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஓய்வுபெறும் வயதை 60-ல் இருந்து 62-ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கடலூரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு மாவட்ட தலைவர் மணிதேவன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் பன்னீர்செல்வம், குணசேகரன், அறிவழகன், பாலசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் குணா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் ரெங்கசாமி கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் ஜெயந்தி, கீதா, மாவட்ட துணை தலைவர் கருணாகரன், மாவட்ட கன்வீனர் ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட தலைவர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் தணிகாசலம் நன்றி கூறினார்.