கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி
புனித வியாழனையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது.
புனித வியாழனையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது.
ஈஸ்டர் பண்டிகை
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 40 நாட்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது. தவக்காலத்தின் தொடக்கமாக சாம்பல் புதனையொட்டி கடந்த மாதம் 22-ந்தேதி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. கடந்த 2-ந்தேதி ஞாயிற்றுக்கிழமையன்று குருத்தோலை ஞாயிறு சிறப்பு பவனி நடந்தது. அன்று முதல் புனித வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் இரவு தனது 12 சீடர்களுக்கு திருவிருந்து அளித்தார். அப்போது தான் கிறிஸ்தவ மதத்தின் மிகவும் முக்கியமாக கருதப்படும் நற்கருணை புதிய உடன்படிக்கையை இயேசு தெரிவித்தார் என்பது நம்பிக்கை. அன்றைய நாளில் தனது சீடர்களின் பாதங்களை இயேசு கழுவினார். இதனை நினைவு கூரும் வகையில் பெரிய வியாழனில் தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
புனித வியாழன்
பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயத்தில் புனித வியாழனை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி 12 முதியவர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டார். இதில் பங்குத்தந்தை சந்தியாகு, இனிகோ, செல்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் நெல்லை, மேலப்பாளையம், டக்கரம்மாள்புரம், உடையார்பட்டி, கே.டி.சி. நகர், பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பெரிய வியாழனை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இன்று (வெள்ளிக்கிழமை) புனிதவெள்ளி பிரார்த்தனையும், நாளை (சனிக்கிழமை) நள்ளிரவில் ஈஸ்டர் பண்டிகை திருப்பலியும் நடக்கிறது.