தேனியில் தேய்ந்து போன செருப்பு தைக்கும் தொழில்


தேனியில் தேய்ந்து போன செருப்பு தைக்கும் தொழில்
x

பிய்ந்து போன காலணிகளை உடனே தூக்கி வீசுவதால் தேனியில் செருப்பு தைக்கும் தொழில் தேய்ந்து போனது.

தேனி

பிய்ந்து போன காலணிகளை உடனே தூக்கி வீசுவதால் தேனியில் செருப்பு தைக்கும் தொழில் தேய்ந்து போனது.

செருப்பு தைக்கும் தொழில்

கால்களை பாதுகாக்க காலணி (செருப்பு) அணியும் பழக்கம் பழங்காலம் முதலே மக்களிடம் இருந்து வருகிறது. ஆரம்ப காலங்களில் விலங்குகளின் தோலால் செய்யப்பட்ட செருப்பை அணிந்தனர். நவநாகரிக உலகில் விதவிதமாக செருப்புகள் வந்துவிட்டன. ஆரம்ப காலங்களில் செருப்பு என்பது ஒரு அத்தியாவசிய பொருளாக மட்டுமே இருந்தது. தற்போது அதுவும் ஆடம்பர பட்டியலில் சேர்ந்துவிட்டது.

முன்பெல்லாம் செருப்பு கடைகள் எண்ணிக்கை குறைவாக தான் இருந்தது. ஒரு செருப்பு வாங்கினால் அது தேயும் வரை அணிவது வழக்கம். பெரும்பாலும் தோல் செருப்பு என்பதால் அதன் ஆயுள் காலமும் அதிகமாக இருந்தது. திடீரென்று செருப்பு அறுந்துவிட்டால் அதை தைப்பதற்கு செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் எடுத்துச் செல்வார்கள்.

இதற்காக நகர்ப்புற பகுதிகளில் பஸ் நிலையங்கள், சந்தை பகுதிகள் போன்ற இடங்களில் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் அமர்ந்து இருப்பார்கள். அவர்களிடம் கொடுத்தால் தைத்துக்கொடுப்பார்கள். அன்றைய கால கட்டத்தில் செருப்பு தைக்கும் தொழில் மும்முரமான தொழிலாகவே இருந்தது. அறுந்த செருப்பை தைக்கச் சென்றால் அங்கே சிலர் செருப்பை கொடுத்துவிட்டு காத்திருந்து தைத்து வாங்கி வர வேண்டும்.

தேய்ந்து போனது

இதுபோன்ற செருப்பு தைக்கும் இடங்களுக்கு அருகாமையில், காத்திருக்கும் மக்களை நம்பி டீக்கடைகள் போட்டு கல்லா கட்டியவர்களும் உண்டு. தொழில்நுட்ப வளர்ச்சியும், மக்களின் மனதில் புகுந்துள்ள ஆடம்பர பழக்க வழக்கங்களும் பல கைவினைத்தொழில்களை நலிவடையச் செய்துள்ளன. அந்த வகையில் செருப்பு தைக்கும் தொழிலும் தேய்ந்து போய்விட்டது.

முன்பு சாலையோரம் ஆங்காங்கே செருப்பு தைக்கும் தொழிலாளர்களை பார்க்க முடிந்தது. தற்போது எங்காவது இருக்கிறார்களா என தேட வேண்டியது உள்ளது. முன்பெல்லாம் ஒரு செருப்பு வாங்கினால் அது அறுந்தாலும் தைத்து பயன்படுத்தும் பழக்கம் இருந்தது. தைத்து, தைத்து இனிமேல் தைக்க வழியில்லை என்ற நிலை வந்த பிறகே வீச மனமின்றி வீசி விட்டு புதிய செருப்பு வாங்கியவர்களும் நிறையபேர் உண்டு.

விரல் விட்டு எண்ணும் அளவில்...

பிளாஸ்டிக் செருப்பு வந்த பின்னர் தோல் செருப்புகளின் பயன்பாடு குறையத் தொடங்கியது. மக்களிடமும் செருப்பு தேயும் முன்பே நிறம் மங்கி விட்டாலே புதிய செருப்பு வாங்கி பயன்படுத்தும் மனநிலை உருவாகி விட்டது. மேலும் பலர் பல விதமான செருப்புகளை வாங்கி பயன்படுத்தும் பழக்கத்தை வழக்கமாக கொண்டுள்ளனர். தங்களின் ஆடைக்கு ஏற்ற நிறத்தில் செருப்பு அணியும் பழக்கமும் அதிகரித்துள்ளது. சிலர் தங்களின் வீடுகளில் ஆடைகளை விதவிதமாக சேகரித்து வைத்துக்கொள்வது போல், ஆடைகளுக்கு ஏற்ப விதவிதமான செருப்புகளையும் சேகரிக்கும் பழக்கம் உள்ளது. இதுபோன்ற பழக்கங்கள் செருப்பு தைக்கும் தொழிலை நலிவடையச் செய்துவிட்டது.

இதனால் செருப்பு தைக்கும் தொழிலை நம்பி இருந்த தொழிலாளர்கள் பலரும் மாற்றுத்தொழிலை தேடி விட்டனர். சிலர் இன்னமும் செருப்பு தைக்கும் தொழிலை செய்து வருகின்றனர். அந்த வகையில் தேனி, கம்பம், போடி, பெரியகுளம் உள்பட மாவட்டத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவில் தான் உள்ளது.

போதிய வருமானம் இல்லை

இதுதொடர்பாக தேனி பழைய பஸ் நிலையத்தில் செருப்பு தைக்கும் தொழில் செய்து வரும் அழகர் கூறியதாவது:-

எனக்கு வயது 49. கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகிறேன். ஆரம்ப கால கட்டத்தில் செருப்பு தயாரித்து கொடுக்கும் தொழில் செய்தேன். பின்னர் பழைய செருப்பு தைப்பது, புதிய செருப்புகளை செய்து கொடுப்பது போன்ற பணிகளை செய்ய தொடங்கினேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தொழில் மும்முரமாக இருந்தது. தினமும் 50-க்கும் மேற்பட்ட செருப்புகளை தைத்து கொடுப்பேன். இப்போது ஒரு நாளைக்கு 4 அல்லது 5 செருப்புகளே தைக்க வருகிறது. செருப்பு தைப்பதில் போதிய வருமானம் கிடைக்காததால் பேக் பழுதுபார்த்தல் போன்ற பணிகளையும் செய்து வருகிறேன். இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்த தொழில் இருக்கும் என்று தெரியாது.

செருப்பு தைக்கும் தொழில் செய்து வரும் மதுரைவீரன் (கம்பம்):-

எனக்கு 40 வயதாகிறது. சிறு வயதில் இருந்தே செருப்பு தைத்து வருகிறேன். மற்ற தொழில்களை எல்லாம் பாதுகாக்க திட்டங்கள் உள்ளன. எங்களை போன்ற தொழிலாளர்களுக்கு என்று சிறப்பு திட்டங்கள் எதுவும் இல்லை. கொரோனா கால கட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்டோம். செருப்பு தைப்பதில் போதிய வருமானம் இல்லாததால் செருப்பு வாங்கி விற்பனை செய்யும் தொழிலும் செய்து வருகிறேன். இந்த தொழில் மிகவும் நலிவடைந்து விட்டது.

சீன தயாரிப்புகள்

கம்பத்தை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளி ஆனந்தன்:-

தற்போது சீன தயாரிப்பு செருப்புகள் அதிகம் விற்பனைக்கு வந்து விட்டது. ரூ.50 முதல் ரூ.100-க்கு செருப்பு கிடைக்கிறது. ஒரு முறை பயன்படுத்தி விட்டு அறுந்து விட்டால் தூக்கி வீசி விடுகின்றனர். பெரும்பாலும் ஏழை, எளிய மக்கள் தான் செருப்பை தைத்து பயன்படுத்துவார்கள். ஆனால், சீன தயாரிப்புகள் வருகையால் அறுந்து போன செருப்பை தைப்பதை விட புதிதாக வாங்கிக்கொள்ளலாம் என்ற மனநிலைக்கு அவர்களும் தள்ளப்பட்டு விட்டனர். இனிவரும் காலங்களில் இந்த தொழில் இருக்குமா என்று தெரியவில்லை. எங்கள் தலைமுறைக்கு பிறகு மக்கள் தங்களின் செருப்புகளை தைக்க வேண்டும் என்றால் தாங்களே தைத்துக்கொள்ள வேண்டிய நிலைமை தான் வரும். முன்பெல்லாம் இந்த தொழிலில் நிறைய தொழிலாளர்கள் இருந்தனர். தொழில் நலிவடைந்து விட்டதால் பலரும் கூலி வேலைக்கு சென்று விட்டனர்.


Next Story