அதிகாரி உள்பட 2 பேருக்கு ஒரு ஆண்டு சிறை
அரசு பள்ளிக்கு மேஜை, நாற்காலி வாங்கியதில் பணத்தை கையாடல் செய்த முன்னாள் அதிகாரி மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிக்கு தலா 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
நாகர்கோவில்:
அரசு பள்ளிக்கு மேஜை, நாற்காலி வாங்கியதில் பணத்தை கையாடல் செய்த முன்னாள் அதிகாரி மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிக்கு தலா 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
அதிகாரி மீது வழக்கு
குமரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முன்னாள் அதிகாரியாக பணியாற்றியவர் ஜோதீந்தர் கீத் பிரகாஷ் (வயது 74). இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் உள்ள கோவில்பட்டி தச்சு மற்றும் கொல்லு தொழிலாளர் குடிசைத் தொழில்கள் கூட்டுறவு சங்க லிமிடெட் முன்னாள் துணைத்தலைவராக இருந்தவர் கணேசன் (63). இவர்கள் 2 பேரும் கடந்த 2005-2006-ம் ஆண்டில் குமரி மாவட்டம் கலிங்கராஜபுரம் அரசு ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலைப்பள்ளிக்கு மரச் சாமான்கள் அனுப்பியதில் முறைகேடு செய்ததாக குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கடந்த 18-6-2007-ந் தேதி ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது ஜோதீந்தர் கீத் பிரகாஷ் மற்றும் கணேசன் ஆகியோர் கூட்டு சதி செய்து பள்ளிக்கூடத்தில் 30 தேக்கு சாய்வு மரமேஜையுடன் கூடிய மர மேஜைகளும், 5 ஒற்றை டிராயருடன் கூடிய மர மேஜைகளும், 5 மர நாற்காலிகளும் தேக்கு மரத்தால் ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்து 725-க்கு செய்ததாக போலியான ஆவணம் தயார் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
1 ஆண்டு சிறை
மேலும் மேஜை, நாற்காலிகள் தேக்கு மரத்தால் செய்வதற்கு பதிலாக வேப்பமரம் மற்றும் பிளைவுட்டினால் செய்துள்ளதும், இதன்மூலம் அரசுக்கு ரூ.90 ஆயிரத்து 65 நிதியிழப்பு ஏற்படுத்தி, அவர்கள் இரண்டு பேரும் அந்த தொகையை கையாடல் செய்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2-4-2014-ந் தேதி அன்று இருவர் மீதும் குமரி மாவட்ட தலைமை குற்றவியல் மற்றும் தனிநீதிபதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த குமரி மாவட்ட தலைமை குற்றவியல் மற்றும் தனிநீதிபதி ஆர்.கோகுலகிருஷ்ணன் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் குற்றம் புரிந்துள்ளனார் என தீர்ப்பு வழங்கினர். அதில், 2 பேருக்கும் தலா ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 2 மாதங்கள் சிறை தண்டைனையும் விதித்து உத்தரவிட் டார்.
ஏற்கனவே தண்டனை பெற்றவர்
இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜென்ஸி ஆஜராகி வாதாடினார். 1 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள ஜோதீந்தர் கீத் பிரகாஷ் கடந்த 2006-ம் ஆண்டு அவர் பணியில் இருந்தபோது தனக்கு கீழ் பணிபுரிந்த ஆதிதிராவிட மாணவர் விடுதி சமையல்காரரிடம் பணி மாறுதலுக்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்றதற்காக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கில் இதே கோர்ட்டில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.