மெகா முகாமில் 37 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
குமரி மாவட்டத்தில்மெகா முகாமில் 37 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது
நாகர்கோவில்:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் இன்னும் சுமார் 1½ லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதால் அவர்களுக்கும் தடுப்பூசி போட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று குமரி மாவட்டம் முழுவதும் 1,500 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்காக 410 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் பல்வேறு இடங்களில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தினர்.
நாகர்கோவிலில் அண்ணா பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையம், கோட்டார் ரெயில் நிலையம் உள்பட 52 வார்டுகளிலும் தடுப்பூசி முகாம் நடந்தது. இதுபோல் மாவட்டம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் முக்கிய சந்திப்பு பகுதிகளில் முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதில் பெரும்பாலானோர் 2-வது மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தினர். மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில் மொத்தம் 37 ஆயிரத்து 321 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.