6 முதல் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்குகாலாண்டு தேர்வு தொடக்கம்


6 முதல் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்குகாலாண்டு தேர்வு தொடக்கம்
x

பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு நேற்று தொடங்கியது.

பெரம்பலூர்

தமிழ் தேர்வு

பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு நேற்று தொடங்கியது. அவர்களுக்கு முதல் நாளில் மொழி பாடமான தமிழ் தேர்வு நடந்தது. 6, 8, 10-ம் வகுப்புகளுக்கு காலையிலும், 7, 9-ம் வகுப்புகளுக்கு மதியமும் தேர்வு நடந்தது. 6-ம் வகுப்புக்கு காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 12 மணி வரை நடந்தது.

8-ம் வகுப்புக்கு காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணி வரை நடந்தது. 10-ம் வகுப்புக்கு தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவின் படி காலாண்டு தேர்வு ஆண்டு பொதுத் தேர்வு போல் நடைபெற்றதால், அவர்களுக்கு காலை 9.45 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1 மணி வரை நடந்தது. 7-ம் வகுப்புக்கு மதியம் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 4 மணி வரை நடந்தது. இதேபோல் 9-ம் வகுப்புக்கு மதியம் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 4.30 மணி வரை நடந்தது.

சோதனையிட்டு உள்ளே அனுமதித்தனர்

தேர்வு அறைக்கு செல்வதற்கு முன்பு வரை மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் படித்து கொண்டிருந்தனர். தேர்வு எழுத தேர்வறைக்கு சென்ற மாணவ- மாணவிகளை அறை கண்காணிப்பாளரான ஆசிரியர்கள் சோதனை செய்து, உள்ளே அனுமதித்தனர். தேர்வு எழுத எழுதுபொருட்கள் மட்டுமே கொண்டு செல்ல மாணவ- மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஏற்கனவே 6, 9-ம் வகுப்புகளுக்கு உடற்கல்வி தேர்வு கடந்த 15-ந்தேதி நடந்தது குறிப்பிடத்தக்கது. 6 முதல் 10-ம் வகுப்புகளுக்கு இன்று (புதன்கிழமை) தேர்வு கிடையாது.

27-ந்தேதியுடன் தேர்வு முடிவடைகிறது

நாளை (வியாழக்கிழமை) ஆங்கில தேர்வு நடக்கிறது. ஏற்கனவே மாவட்டங்களில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு கடந்த 15-ந்தேதி காலாண்டு தேர்வு தொடங்கியது. அவர்களுக்கு காலாண்டு தேர்வு தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவின்படி பொதுத் தேர்வு போல் நடைபெற்று வருகிறது. நேற்று பிளஸ்-2-க்கு காலையிலும், பிளஸ்-1-க்கு மதியமும் ஆங்கில தேர்வு நடந்தது. இன்று பிளஸ்-1-க்கு இயற்பியல், பொருளாதாரம், வேலை வாய்ப்பு திறன்கள் ஆகிய பாடங்களின் தேர்வுகளும், பிளஸ்-2-க்கு கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள் ஆகிய பாடங்களின் தேர்வுகளும் நடக்கிறது. 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு வருகிற 27-ந்தேதியுடன் காலாண்டு தோ்வு முடிவடைகிறது.


Next Story