ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறு, சூரிய ஒளி மின்சார மோட்டார் பாசன வசதி திட்டம்- கலெக்டர் தகவல்


ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறு, சூரிய ஒளி மின்சார மோட்டார் பாசன வசதி திட்டம்- கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 23 Jun 2023 6:03 AM IST (Updated: 23 Jun 2023 12:54 PM IST)
t-max-icont-min-icon

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறு அல்லது சூரிய ஒளி மின்சார மோட்டார் பாசன வசதி அமைத்து தரப்படுகிறது.

மதுரை


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறு அல்லது சூரிய ஒளி மின்சார மோட்டார் பாசன வசதி அமைத்து தரப்படுகிறது.

பாசன வசதி திட்டம்

இது குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து மின் அல்லது சோலார் (சூரிய ஒளி) மோட்டார் உடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்து தரப்படும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் சட்ட சபையில் அறிவித்துள்ளார். அதன்படி, 2022-2023 - 2023-2024-ம் ஆண்டில் இந்த திட்டத்தினை வேளாண்மை துறை மதுரை மாவட்டத்தில் 32 பாதுகாப்பான கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்த உள்ளது.

மேலும், இந்த திட்டத்தை மதுரை மாவட்டத்தில் மேலவளவு, பூதமங்கலம், சுக்காம்பட்டி, பூஞ்சுத்தி, டி.வெள்ளாளபட்டி, வேப்படப்பு, அச்சம்பட்டி, மணியஞ்சி, வடுகப்பட்டி, பண்ணைக்குடி, பெரிய இலந்தைகுளம், உன்னிபட்டி, வீரபெருமாள்புரம், திருமால், மேலஉப்பிலிகுண்டு, வலையங்குளம் உள்ளிட்ட 46 பாதுகாப்பான கிராம பஞ்சாயத்துகளில் 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்து மின்மோட்டார் உடன் நுண்ணீர் பாசன வசதி 30 எண்கள் மற்றும் பண்ணை குட்டைகள் 33 எண்கள் செயல்படுத்த உள்ளது. எனவே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

பண்ணை குட்டைகள்

இத்திட்டத்திற்கு ஏற்றவாறு ஆழ்துளை கிணறு அமைத்தல், மின்சார அல்லது சோலார் பம்பு செட்டுகள் நிறுவுதல், பாசன நீர் குழாய்கள் நிறுவுதல் மற்றும் நுண்ணீர் பாசன அமைப்புகளை நிறுவுதல் போன்றவை செய்து தரப்படும். அரசினால் நிர்ணயிக்கப்பட்டு உள்ள ஆழத்திற்கும் அதிகமாக கிணறு அமைக்க வேண்டும் என்றாலோ அல்லது கூடுதல் குதிரை திறன் கொண்ட பம்புசெட்டுகள் நிறுவ வேண்டும் என்றால் கூடுதல் செலவினை விவசாயிகளே ஏற்க வேண்டும்.

2021-2022 கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பவர்டிரில்லர் வழங்கப்பட்டு வருகிறது. 2022-2023-ம் ஆண்டு கிராமங்களில் பண்ணை குட்டைகள் அமைப்பதற்கு ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

மேலும், சூரிய மின் மோட்டார், சூரிய கூடார உலர்த்தி, சூரிய மின் வேலி மற்றும் பழைய மின் மோட்டார்களை மாற்றி புதிய மின்மோட்டார் வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கூடுதல் விவரங்கள்

இது குறித்து மேலும் விவரங்களை உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, எண்.60, திருப்பரங்குன்றம் ரோடு, மதுரை-625001 மற்றும் உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை உசிலம்பட்டி, ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், மதுரை மெயின்ரோடு, உசிலம்பட்டி -625532 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story