ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு கால்நடை தீவனப்புல் வளர்க்க மானியம்


ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு  கால்நடை தீவனப்புல் வளர்க்க மானியம்
x

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு, கால்நடை தீவனப்புல் வளர்க்க மானியம் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

ஈரோடு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு, கால்நடை தீவனப்புல் வளர்க்க மானியம் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

தீவனப்புல்

தாட்கோ திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க, விதைத்தொகுப்பு மற்றும் புல்கரணைகள் போன்றவைகள் கொள்முதல் செய்து வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற 18 வயது முதல் 65 வயது வரை உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்கக்கூடாது. தீவனப்புல் மற்றும் புல்கரணைகள் வளர்க்க ஆர்வமுள்ள விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விதிமுறைகளின்படி விண்ணப்பதாரர்களை சம்மந்தப்பட்ட கால்நடை உதவி டாக்டர் பரிந்துரைப்பார். விவசாயிகள் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும். அல்லது உறுப்பினராக சேரவேண்டும்.

மானியம்

பயனாளிகளுக்கு விதைத்தொகுப்பு, புல் கரணைகளுடன் தீவனங்களை வளர்க்க தேவையான பயிற்சி, கையேடுகள் மற்றும் களப்பயிற்சி ஆகியவற்றிற்கான செலவினங்கள் ஒருவருக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் என்ற மானியத்தொகைக்கு உட்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

தீவன விதைகள் ஆவின் நிறுவனம், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு வழங்கப்படும். விண்ணப்பதாரர் உரிய ஆவணங்களுடன் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் 6-வது மாடியில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0424 2259453 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


Next Story