சாயர்புரம் பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் கூட்டுக்குடிநீர் ; கலெக்டர் தகவல்


சாயர்புரம் பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் கூட்டுக்குடிநீர் ; கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாயர்புரம் நகரப் பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் கூட்டுக் குடிநீர் விரைவில் கிடைக்கும் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

தூத்துக்குடி

சாயர்புரம்:

சாயர்புரம் நகரப் பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் கூட்டுக் குடிநீர் விரைவில் கிடைக்கும் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

ரேஷன் கடை கட்டிடம் திறப்பு

சாயர்புரம் சி.எஸ்.ஐ. சர்ச் சாராக் ஹால் அருகில் புதிய ரேஷன் கடை கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் திறந்து வைத்தார்.

பின்பு அவர் பேசியதாவது:-

சாயர்புரத்தில் மக்களாகிய நீங்கள் பொதுப்பணிக்காக ரூ.2.88 லட்சம் வசூல் செய்து கட்டிய ரேஷன் கடை கட்டிடத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். முதல்-அமைச்சர் அறிவித்துள்ள பொங்கல் பரிசான ஒரு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கம் ஆகியவற்றை இந்த கடையில் உள்ள 350 குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்குவதற்கு சரியான நேரத்தில்தான் ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரையும் தங்கள் தொகுதியில் உள்ள 10 கோரிக்கைகளை தெரிவிக்குமாறும், அதனை ஒரே ஆண்டில் நிறைவேற்றி தருவதாகவும் அறிவித்துள்ளார்.

அதனடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், சாயர்புரம் பகுதிக்கு கூட்டுக்குடிநீர் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அனைத்து வீடுகளுக்கும் கூட்டுக்குடிநீர் கிடைப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கூடுதல் வகுப்பறை

மேலும் இங்குள்ள பள்ளியில் 5000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிப்பதால் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் நிதி மூலமாகவோ கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல் காசிம், மாவட்ட செய்தி- மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன், ஏரல் தாசில்தார் கண்ணன் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Next Story