கல் குவாரி அனுமதியை ரத்து செய்யக்கோரி ரேஷன் அட்டையை ஒப்படைக்கும் போராட்டம்
கல் குவாரி அனுமதியை ரத்து செய்யக்கோரி ரேஷன் அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
செய்யாறு,
கல் குவாரி அனுமதியை ரத்து செய்யக்கோரி ரேஷன் அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
செய்யாறு தாலுகா அத்தி கிராமத்தில் அமைந்துள்ள மலையில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். இங்கு கல் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தனியார் நிறுவனத்திற்கு கல் குவாரி அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பங்கேற்ற அத்தி கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் உதவி கலெக்டர் அனாமிகாவிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது:-
அத்தி கிராமத்தில் அரசு மலை புறம்போக்கு இடத்தில் தனியார் நிறுவனம் கல்குவாரி அமைக்க அனுமதி பெற்று முருகன் கோவில் இருக்கும் அந்த மலையை வெட்டி எடுக்க பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த மலை ஏலம் தொடர்பாக பல கட்டமாக நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கல்குவாரி அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உரிமம் ரத்து செய்யும் வரை அத்தி கிராம மக்கள் ஒன்று திரண்டு உண்ணாவிரத போராட்டம் நடத்துவது, அத்தி கிராமத்தில் உள்ள அனைவரின் குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளோம்.