குழந்தைகளுக்குசிறப்பு ஊட்டச்சத்து உணவு வழங்கும் பணி:கலெக்டர் தொடங்கி வைத்தார்
குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து உணவு வழங்கும் பணியை தேனி கலெக்டர் தொடங்கி வைத்தார்.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில், ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து உணவு வழங்கும் பணியின் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி, இந்த பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:-
'ஊட்டச்சத்தை உறுதிசெய்' திட்டம் 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு உணவு, 8 வாரங்கள் அதாவது 56 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும், ஆறு மாதம் வரை உள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு 2 ஊட்டச்சத்து பெட்டகமும், முதல் மாதம் வரை மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கும் திட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து பெட்டகங்களில் பேரீச்சம் பழம் - 1 கிலோ, நெய் - ½ கிலோ. அமினோ அமிலம் விட்டமின் திரவம் -600 மி.லி. புரோட்டீன் பவுடர் -1 கிலோ, குடற்புழு நீக்கமாத்திரை-1. அளவுக் கோப்பை-1, துண்டு -1 ஆகிய பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மதுமதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.