கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சிஉதவி ஆணையாளர் தகவல்


கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சிஉதவி ஆணையாளர் தகவல்
x

கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஈரோடு

கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக, தொழிலாளர் உதவி ஆணையாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

திறன் மேம்பாட்டு பயிற்சி

தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதில் 3 மாத கால திறன் பயிற்சி, கட்டுமான கழகம், எல் அண்ட் டி., கட்டுமான திறன் பயிற்சி நிலையத்துடன் இணைந்து வழங்கப்படும். பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர் 5-ம் வகுப்பு முதல், பிளஸ்-2 வரையும் அல்லது ஐ.டி.ஐ. படித்திருக்கலாம். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

கொத்தனார், பற்றவைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பி வளைப்பவர், கார்ன்டரி, பார்பெண்டிங் பயிற்சிக்கு கட்டணம் கிடையாது. உணவு, தங்குமிடம் இலவசம். பயிற்சி முடித்த பின்னர் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

சான்றிதழ்

ஒரு வார திறன் மேம்பாட்டு பயிற்சி, கட்டுமான கழகம், எல் அண்ட் டி., கட்டுமான திறன் பயிற்சி நிலையம் மூலம் தரப்படும். தையூரில் நடக்கும் பணியிடத்தில் 7 நாட்கள் பயிற்சி தரப்படும். தமிழில் எழுத படிக்க தெரிந்த 18 வயதுக்கு மேற்பட்ட கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்றவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். 3 ஆண்டு கால உறுப்பினராக இருக்க வேண்டும். இவர்களுக்கும் மேற்குறிப்பிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு, வேலை இழப்பு ஏற்படுவதை ஈடுசெய்ய தினமும் ரூ.800 வழங்கப்படும்.

பயிற்சி நிறைவில் தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இந்த பயிற்சி வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி தொடங்குகிறது. எனவே, பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள், தங்கள் விவரத்தை நேரிலோ, தொழிற்சங்கம் மூலமாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ, உரிய படிவத்தை பூர்த்தி செய்து, 'ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையாளர் (சமூக பாதுகாப்பு திட்டம்), சென்னிமலை ரோடு, அரசு ஐ.டி.ஐ., பின்புறம், ஈரோடு' என்ற முகவரியில் அளிக்கலாம்.

மேற்கண்ட தகவலை ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையாளர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முருகேசன் தெரிவித்துள்ளார்.


Next Story