கட்டுமான தொழிலாளர்களுக்குரூ.50¼ லட்சம் நலத்திட்ட உதவிகள்- பாதுகாப்பு உபகரணங்கள்அமைச்சர்கள் எம்ஆர்கேபன்னீர்செல்வம், சிவெகணேசன் வழங்கினர்


கட்டுமான தொழிலாளர்களுக்குரூ.50¼ லட்சம் நலத்திட்ட உதவிகள்- பாதுகாப்பு உபகரணங்கள்அமைச்சர்கள் எம்ஆர்கேபன்னீர்செல்வம், சிவெகணேசன் வழங்கினர்
x
தினத்தந்தி 3 Jan 2023 12:15 AM IST (Updated: 3 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.50¼ லட்சம் நலத்திட்ட உதவிகள்- பாதுகாப்பு உபகரணங்களை அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் வழங்கினர்.

கடலூர்

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கடலூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் முன்னிலை வகித்தார். விழாவில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 1052 பயனாளிகளுக்கு ரூ.24 லட்சத்து 23 ஆயிரம் நலத்திட்ட உதவிகள் மற்றும் 3,433 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 15 ஆயிரத்து 755 மதிப்பீட்டில் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினர்.

கடந்த ஆட்சியில் எதுவும் செய்யவில்லை

விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசுகையில், கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் தான் கட்டுமான தொழிலாளர்கள் அதிகம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்து உள்ளனர். கடந்த 1½ ஆண்டுகளில் 11½ லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்து உள்ளனர். ஆனால் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு எதுவும் செய்யாததால், உறுப்பினராக பதிவு செய்ய அவர்கள் ஆர்வம் காட்டவில்லை.

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சில திட்டங்களுக்கு மத்திய அரசு 20 சதவீத தொகையும், மாநில அரசு 80 சதவீத தொகையும் செலுத்துகிறது. ஆனால் திட்டங்களுக்கு மட்டும் பிரதம மந்திரி என்று மத்திய அரசு பெயர் வைக்கப்படுகிறது. கட்டுமான தொழிலாளர்களுக்கு புதிதாக வீடு கட்ட தலா ரூ.4 லட்சம் தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. இந்த திட்டத்தை கட்டுமான தொழிலாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

மாவட்ட கண்காணிப்பு குழு

விழாவில் அமைச்சர் சி.வெ.கணேசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கட்டுமான தொழிலாளர்கள் சொந்த வீடு கட்டுவதற்கு ஒரு பயனாளிக்கு ரூ, 4 லட்சம் வீதம், முதற்கட்டமாக 10 ஆயிரம் தொழிலாளர்கள் பயனடையும் வகையில் ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்து தொழிலாளர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய இந்த அரசு வழிவகை செய்துள்ளது.

2021 - 2022-ம் நிதியாண்டில் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களில் 15,885 தொழிலாளர்களுக்கு 11 கோடியே 63 லட்சத்து 5 ஆயிரத்து 670 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 2022 - 2023 நடப்பு நிதியாண்டில் 2022 நவம்பர் மாதம் வரை பதிவு பெற்ற தொழிலாளர்களில் 13 ஆயிரத்து 93 தொழிலாளர்களுக்கு 8 கோடியே 71 லட்சத்து 74 ஆயிரத்து 50 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் உரிய நேரத்தில் சென்று அடைவதை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் தலைமையிலான மாவட்ட கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வாழ்த்து பெற்றனர்

தொடர்ந்து தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் வாயிலாக குறிஞ்சிப்பாடி வட்டார அளவிலான கூட்டமைப்பு சிறந்த நிர்வாகத்திறன், அனைத்து பதிவேடுகளும் சிறப்பாக பராமரித்தல், கொரோனா விழிப்புணர்வு, தேர்தல் விழிப்புணர்வு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு உள்ளிட்ட சிறப்பான செயல்பாடுகளுக்கு மாநில அளவில் மணிமேகலை விருதை திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார், மேலும் பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதை அவர்கள் நேற்று அமைச்சர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் சபா.ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், கூடுதல் கலெக்டரும், திட்ட இயக்குனருமான பவன்குமார் ஜி.கிரியப்பனவர், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், தொழிலாளர் இணை ஆணையர் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கோ.ராமு, மகளிர் திட்ட அலுவலர் செந்தில்வடிவு, உதவி திட்ட அலுவலர்கள் முத்துபாண்டியன், கஸ்பர்ராஜா, வட்டார இயக்க மேலாளர் சத்தியநாதன் மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள், கட்டுமான தொழியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story