கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.52 லட்சம் நலத்திட்ட உதவிகள்:கனிமொழி எம்.பி. வழங்கினார்


தினத்தந்தி 17 Feb 2023 12:15 AM IST (Updated: 17 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.52 லட்சம் நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.52 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி வழங்கினார்.

நலத்திட்டஉதவி

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் சார்பில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. விழாவுக்கு கலெக்டர் செந்தில் ராஜ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார் பேசினார். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு, 3 ஆயிரத்து 101 பயனாளிகளுக்கு ரூ.52 லட்சத்து 9 ஆயிரத்து 350 மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது, தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த நலவாரியம் தற்போது உயிர்ப்பிக்கப்பட்டு இயங்கி கொண்டிருக்கிறது. துத்துக்குடி மாவட்டத்தில் 36 ஆயிரம் பேர் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். நலவாரியத்தில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 18 நலவாரியங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 280 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இன்னும் அதிகமான பேரை நலவாரியத்தில் இணைக்க வேண்டும்' என்று கூறினார்.

20 லட்சம் உறுப்பினர்கள்

விழாவில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்குமார் பேசும் போது, நலவாரியம் சார்பில் தொழிலாளர்களுக்கு மாவட்டம் வாரியாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. திராவிட மாடல் ஆட்சி, மக்களுக்கான ஆட்சியாக இருக்கிறது. கடந்த 20 மாத காலத்தில் 20 லட்சம் பேர் வாரியத்தில் உறுப்பினர்களாக இணைந்து உள்ளனர். கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் 1.5 லட்சம் பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். வாரியத்தில் பதிவு செய்த வீடு கட்டும் தொழிலாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு ரூ.4 லட்சம் இலவசமாக வழங்குகிறோம். கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.2 ஆயிரமாக விரைவில் உயர்த்தி வழங்கப்பட உள்ளது என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அ.பிரம்மசக்தி, தொழிலாளர் உதவி ஆணையர்கள் க.திருவள்ளுவன் (அமலாக்கம்), நா.முருகப்பிரசன்னா (சமுக பாதுகாப்பு திட்டம்) மற்றும் பல்வேறு நலவாரிய உறுப்பினர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story