வளர்ச்சி பணிகளுக்கு ரூ.1,351 கோடி ஒதுக்கீடுஅமைச்சர் கே.என்.நேரு பேச்சு
கடந்த 2 ஆண்டுகளில ் குமரி மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு ரூ.1,351 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
நாகர்கோவில்,
கடந்த 2 ஆண்டுகளில ் குமரி மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு ரூ.1,351 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
குடிநீர் திட்டம்-முடிவுற்ற பணிகள்
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் முடிவுற்ற பணிகளுக்கான தொடக்க விழா, ரூ.174 கோடியில் காட்டாத்துறையில் அமைக்கப்பட்டுள்ள இரணியல் கூட்டுக்குடிநீர் திட்டம், குழித்துறை நகராட்சிக்கான குடிநீர் திட்டம், தூத்தூர், முட்டம் ஊராட்சிக்கான குடிநீர் திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைக்கும் விழா நாகர்கோவில் கோர்ட்டு ரோடு மற்றும் காட்டாத்துறை ஆகிய பகுதிகளில் நேற்று நடந்தது.
விழாக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் கதர் கிராமத் தொழில் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, குமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
விழாவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நாகர்கோவில் மாநகராட்சியில் நிறைவுற்ற வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், காட்டாத்துறையில் கூட்டு குடிநீர் திட்டங்களையும் தொடங்கி வைத்தும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.70.84 கோடிக்கு சாலை பணிகள், ரூ.4 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்றிருக்கிறது. ரூ.2.39 கோடிக்கு திடக்கழிவு மேலாண்மை பணிக்கு வாகனங்களும், ரூ.15.94 கோடிக்கு எல்.இ.டி தெரு விளக்குகளும் வாங்கப்பட்டுள்ளன. ரூ.1.36 கோடி குடிநீர் பணிக்காக செலவிடப்பட்டிருக்கிறது. ரூ.96 லட்சத்தில் நீர்நிலை மேம்பாட்டு பணிகளும், ஒரு கோடி ரூபாயில் பூங்காக்களும் புனரமைக்கப்பட்டிருக்கிறது. புளியடி எரிவாயு தகன மேடையில் ரூ.1.25 கோடியில் எல்.பி.ஜி. தகன மேடை உருவாக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையம் சீரமைப்புக்காக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ரூ.1½ கோடியில் சந்தைகளும், ரூ.2.50 கோடியில் அறிவுசார் மையங்களும் அமைக்கப்பட்டிருக்கிறது. ரூ.9.94 கோடியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மொத்தம் ரூ.131.38 கோடி செலவிடப்பட்டுள்ளது. ரூ.296.8 கோடியில் 3 லட்சத்து 90 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டம் செயலாக்கத்தில் உள்ளது. ஆக மொத்தம் கடந்த 2 ஆண்டுகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரி மாவட்டத்துக்கு மட்டும் 400 கோடி ரூபாய் இந்த துறை மூலம் ஒதுக்கி தந்திருக்கிறார்.
ரூ.1,351 கோடி ஒதுக்கீடு
மாநகராட்சி கட்டிடம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் நாகர்கோவிலில் இருக்கும் கட்டிடம் தான். கூட்ட அரங்கு, மேயர் அறை, ஆணையர் அறை, பொதுமக்களை சந்திக்கும் இடம் ஆகியவை மிக அருமையாக இருக்கிறது. இதையே முன் மாதிரியாக கொண்டு மற்ற மாவட்டங்களில் நகராட்சி, மாநகராட்சிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுங்கள் என்று என்துறையை சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன். பேரூராட்சி, நகராட்சிகளில் உள்ள குளங்கள் புனரமைப்பதற்கு தேவையான நிதி தரப்படும்.
குமரி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகள் உள்ளன. மாநிலத்திலேயே 6 சட்டசபை தொகுதிகளில் 51 பேரூராட்சிகள் இருப்பது இங்கு தான். இங்கு கடந்த 24 மாதங்களில் ரூ.1,351.14 கோடி செலவு செய்ய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுமதி தந்துள்ளார். நாகர்கோவில் மாநகராட்சிக்கு ரூ.131.38 கோடியும், 4 நகராட்சிகளுக்கு ரூ.57.50 கோடியும், 51 பேரூராட்சிகளுக்கு ரூ.524.9 கோடியும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.638 கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளது.
அருமையாக உருவாகியுள்ளது
குமரி மாவட்டத்தில் சாலையை அகலப்படுத்தும் போது குடிசைகளை அகற்றக் கூடாது என எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. கூறியுள்ளார். எனவே சாலையை அகலப்படுத்தும் போது அகற்றப்படும் வீடுகளுக்கு மாற்று வீடு தருவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளோம். குமரி மாவட்டத்தில் குடிநீர் ஆதாரம் அதிகம் இருக்கிறது. ஆனால் அதை செயல்படுத்தும் போது பல்வேறு சிரமங்கள் உள்ளன. இங்கு மேடு, பள்ளங்கள் அதிகம் உள்ளன. சாலையை சீரமைக்கும் போது குடிநீர் குழாய்கள் சேதம் அடைகிறது. குமரி மாவட்டத்தில் கையளவு இடம் கூட கொடுக்க மாட்டார்கள். ஆனால் தற்போது மலையில் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு இடம் கொடுக்கப்பட்டு உள்ளது. குறைவான செலவில் நிறைவான திட்டமாக இந்த திட்டம் அருமையாக உருவாகி இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
மாற்றத்தை உருவாக்கியது
முன்னதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், கே.என்.நேரு மூத்த அமைச்சராக மட்டுமல்ல அரசியலிலும் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார். அவரிடம், நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலை சந்திக்க சில பணிகளை முடிக்க வேண்டும் என நான் கோரிக்கை வைத்தேன். அவர் உடனே மறுவார்த்தை சொல்லாமல் 26 கோடி ரூபாயை உடனடியாக ஒதுக்கி தந்தார். அது ஒரு மாற்றத்தை உருவாக்கியது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் அல்லும் பகலும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு அமைச்சர் கே.என்.நேரு ஒரு எடுத்துக்காட்டு என்றார்.
மாநகராட்சி மேயர் மகேஷ் பேசுகையில், ரூ.4 கோடி தந்து கோர்ட்டு ரோடு, பெண்கள் கிறிஸ்தவக்கல்லூரி ரோடு ஆகியவற்றை விரிவாக்கம் செய்ய அமைச்சர் கே.என்.நேரு நடவடிக்கை எடுத்தார். வடசேரியில் புதிய பஸ் நிலையம் வேண்டும் என்று கேட்டோம். அதற்கு ரூ.65 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பப்பட்டது. அதில் ரூ.55 கோடியை ஒதுக்கி இந்த நாகர்கோவில் மாநகராட்சிக்கு தந்த பெருமை அவருக்கு உண்டு. நாகர்கோவில் மாநகராட்சிக்கு மேலும் ரூ.200 கோடி நிதி ஒதுக்கினால் நாகர்கோவில் மாநகராட்சி தன்னிறைவு பெற்ற மாநகராட்சியாக உங்களது காலத்தில் மாறும் என்றார்.