உடற்கல்வி இயக்குனர்களுக்கு மாநில அளவிலான புத்தாக்கப்பயிற்சி
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் உடற்கல்வி இயக்குனர்களுக்கு மாநில அளவிலான புத்தாக்கப்பயிற்சி நடந்தது.
திருச்செந்தூர்:
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு புதிதாக பணிநியமனம் செய்யப்பட்டுள்ள உடற்கல்வி இயக்குனர்களுக்கு மாநில அளவில் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் புத்தாக்க பயிற்சி நடந்தது. புத்தாக்கப்பயிற்சி நேற்று முன்தினம் தொடங்கி இன்று வரை 3 நாட்கள் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் அறிவுரைபடி, தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கோல்டா கிரேனா ராஜாத்தி தலைமையில் நடந்தது. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை பேராசிரியர் சந்திரா வரவேற்று பேசினார். ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சாம்ராஜ் பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார்.
இப்புத்தாக்கப் பயிற்சியை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி பார்வையிட்டு உடற்கல்வி இயக்குநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய செசிலி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன உடற்கல்வியியல் பேராசிரியர் மல்லிகா, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் புத்தாக்கப்பயிற்சி பெறும் 60 உடற்கல்வி இயக்குனர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியர் பிலோமின் பாலா நன்றி கூறினார்.