மின்சார தகன மேைடயை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்
ஆற்காடு நகரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மின்சார தகன மேடையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆற்காடு நகரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மின்சார தகன மேடையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நகராட்சி கூட்டம்
ஆற்காடு நகராட்சி கூட்டம் நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் டாக்டர் பவளக்கொடி சரவணன், ஆணையாளர் (பொறுப்பு) கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-
ஆனந்தன், உதயகுமார்,விஜயகுமார்: ஆற்காடு பஸ் நிலையம், தனியார் திருமண மண்டபம் அருகே ஆக்கிரமிப்புகளைஅகற்ற வேண்டும். பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.துப்புரவு பணியாளர்களுக்கு கை உறை மற்றும் மழை கோட்டு வழங்க வேண்டும்.
மின்சார தகன மேடை
தட்சிணாமூர்த்தி: ஆற்காடு நகரில் மின்சார தகன மேடை கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை. அதை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
பொன்.ராஜசேகர்: ஆற்காடு நகரில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என கோரிக்க வைக்கின்றனர். அவ்வாறு பிடிக்கப்படும் மாடுகளை அடைத்து வைக்க பவுண்டரி கிடையாது. எனவே அதற்கு உண்டான இடத்தை உடனடியாக தேர்வு செய்ய வேண்டும்.
விமலா: எனது வார்டில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான மாதிரி பள்ளி பழுதாகி இருந்ததால் இடிக்கப்பட்டுள்ளது. அதனை உடனடியாக கட்டித் தர வேண்டும்.
கஞ்சா விற்பனை
கண்மணி: துப்புரவு பணிகள் சரியாக நடைபெறுவதில்லை அதனை துரிதப்படுத்த வேண்டும். மேலும் சாய்பாபா நகரில் கஞ்சா விற்பனை அதிகமாக உள்ளது. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர்: தங்கள் வார்டில் உள்ள குறைகளை கூட்டத்தின் மூலமாக தான் தெரியப்படுத்த வேண்டும் என்பது கிடையாது. எப்போது வேண்டுமானாலும் தெரியப்படுத்தலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்
தமிழ்ச்செல்வி: நகராட்சி உருது தொடக்கப் பள்ளியை உயர்நிைல பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.
துணைத் தலைவர் பவளக்கொடி சரவணன்: எந்த ஒரு அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சியாகட்டும் எனக்கு தகவல் தெரிவிப்பதில்லை. இனிவரும் காலங்களில் முறைப்படி தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது. கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.