பெண் வாடிக்கையாளருக்கு சேவை குறைபாடு ஏற்படுத்திய பல்பொருள் அங்காடிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு
பெண் வாடிக்கையாளருக்கு சேவை குறைபாடு ஏற்படுத்திய பல்பொருள் அங்காடிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
விழுப்புரம் தந்தை பெரியார் தெருவை சேர்ந்தவர் அய்யனார் மகள் லாவண்யா (வயது 35). இவர் கடந்த 3.11.2021 அன்று விழுப்புரம் பாகர்ஷா தெருவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு சென்று தனக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த 2 பேருக்கும் என 3 பேருக்கு மளிகைப்பொருட்களை ரூ.992-க்கு வாங்கினார். ஆனால் கடை ஊழியர்கள் கேட்ட தொகையான ரூ.1,001-ஐ லாவண்யா கொடுத்து பொருட்களை வாங்கி வந்துள்ளார்.
பின்னர் ரசீதை பார்க்கும்போது ரூ.992 என்று குறிப்பிட்டுள்ளது. மறுநாள் கடைக்கு சென்று கேட்டபோது பிளாஸ்டிக் கவர் ஒன்றுக்கு ரூ.3 வீதம் ரூ.9-ஐ சேர்த்து பெற்றுக்கொண்டதாக கடை ஊழியர்கள் கூறியுள்ளனர். அப்படியானால் ரூ.9-க்கு சேர்த்து ரசீது தருமாறும், இல்லையெனில் ரூ.9-ஐ திருப்பித்தருமாறும் கேட்டார். அதற்கு மறுநாள் வரும்படி கூறி 2, 3 முறை அலைக்கழித்ததோடு 9 ரூபாய்க்கான ரசீதை கொடுக்கவில்லை.
பல்பொருள் அங்காடிக்கு அபராதம் விதிப்பு
இதுகுறித்து லாவண்யா, அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொது நலச்சங்க மாநில தலைவர் ஆரோக்கியசாமி மூலமாக விழுப்புரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சதீஷ்குமார், உறுப்பினர்கள் மீராமொய்தீன், அமலா ஆகியோர் விசாரித்து வந்த நிலையில் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறினர்.
அதாவது மனுதாரர் லாவண்யாவுக்கு பிளாஸ்டிக் கவர்களுக்குரிய ரூ.9-ஐ ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் 31.1.2021 முதல் பல்பொருள் அங்காடியின் உரிமையாளர் திருப்பித்தர வேண்டும். மேலும் மனுதாரருக்கு ஏற்படுத்திய சேவை குறைபாட்டிற்கும், மனஉளைச்சலுக்கும், அலைச்சலுக்கும் இழப்பீடாக ரூ.10 ஆயிரத்தையும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.5 ஆயிரத்தையும் கடையின் உரிமையாளர் செலுத்துவதோடு, ரூ.25 ஆயிரத்தை நுகர்வோர் கோர்ட்டுக்கு அபராதமாக செலுத்தும்படியும் தீர்ப்பு கூறப்பட்டது.
கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
இவ்வழக்கின் தீர்ப்பை சுட்டிக்காட்டிய நுகர்வோர் நீதிமன்றம், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு, விற்பனையை முற்றிலும் ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளது.