உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு 9 பேர் வேட்பு மனு தாக்கல்
தேனி மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு இன்று 9 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்
தமிழகத்தில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு அடுத்த மாதம் (ஜூலை) 9-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் 9 பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. நேற்று பெரியகுளம் நகராட்சி 26-வது வார்டு கவுன்சிலர், வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவி, மொட்டனூத்து ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தலா ஒருவர், சின்னஓவுலாபுரம் ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர் என 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 9 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பெரியகுளம் நகராட்சி 26-வது வார்டு கவுன்சிலர், வடபுதுப்பட்டி ஊராட்சி தலைவர், வடபுதுப்பட்டி ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர், மொட்டனூத்து ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர், ரெங்கசமுத்திரம் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தலா ஒருவரும், சின்னஓவுலாபுரம் ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர், டி.வாடிப்பட்டி ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தலா 2 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். முத்தாலம்பாறை ஊராட்சி 6-வது வார்டு, தும்மக்குண்டு ஊராட்சி 7-வது வார்டு ஆகிய பதவிகளுக்கு ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும்.