பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்குதொழில்கல்விகளுக்கான நுழைவுத்தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறதுஆசிரியர்கள்-மாணவிகள் கருத்து


தினத்தந்தி 24 Jan 2023 1:00 AM IST (Updated: 24 Jan 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர்கள்-மாணவிகள் கருத்து

ஈரோடு

நுழைவுத்தேர்வு என்பது இன்றைய காலக்கட்டத்தில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் அடுத்த கட்ட கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான தேர்வாக அமைந்து உள்ளது. மருத்துவம், என்ஜினீயரிங் ஆகிய துறைகளின் கீழ் உள்ள படிப்புகளான தொழில் கல்விகளுக்கு இந்த நுழைவுத்தேர்வுகள் கட்டாயமாக்கப்பட்டு இருக்கின்றன. மருத்துவ படிப்புக்கு நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வும், ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் தொழில் நுட்ப படிப்புக்கான ஜெ.இ.இ. எனப்படும் இணை நுழைவுத்தேர்வும் பிளஸ்-2 மாணவர்களின் இலக்காக நிர்ணயிக்கப்படுகிறது.

கனவு

கடந்த காலங்களில் மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை, என்ஜினீயரிங் சேர்க்கை அமைந்தது. ஆனால் நீட், ஜெ.இ.இ. நுழைவுத்தேர்வுகள் கட்டாயப்படுத்தப்பட்ட பிறகு, பிளஸ்-2 மாணவ-மாணவிகள் சக்கையாக பிழிந்து எடுக்கப்படுகிறார்கள்.

உயர் கல்வி அல்லது தொழில் சார்ந்த கல்விகளுக்கான நுழைவுத்தேர்வு தேவையா, தேவை இல்லையா? என்பது தொடர்பாக பல்வேறு கருத்துகள் இருந்தாலும், பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகள் இந்த சுமையை தாங்கிக்கொள்வார்களா? என்ற கேள்வியை யாரும் எழுப்பவில்லை. மாணவ-மாணவிகள் பல லட்சம்பேர் ஆண்டு தோறும் நீட் மற்றும் ஜெ.இ.இ. தேர்வுக்காக விண்ணப்பிக்கிறார்கள். அதில் ஒரு சிலர் தோல்விக்காக மரணம் அடைவதை சாதாரணமாகவே அரசும், அதிகாரிகளும் எடுத்துக்கொள்வதாக தெரிகிறது. ஆனால், இதுசார்ந்து ஆசிரியர்கள், மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள்.

எஸ்.பி.ரிதுவர்ஷினி

இதுகுறித்து ஈரோட்டை சேர்ந்த பிளஸ்-2 மாணவி எஸ்.பி.ரிதுவர்ஷினி கூறியதாவது:-

நான் பிளஸ்-1 வகுப்பில் இருந்து நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறேன். வாரத்தில் 3 நாட்கள் இதற்காக சிறப்பு பயிற்சி பெறுகிறேன். அதே நேரம் பள்ளிக்கூட பாடத்தையும் படிக்கிறேன். இதனால் நான் என்ன படிக்கிறேன் என்ற குழப்பமும் ஏற்படுகிறது. எங்கள் ஆசிரியர்கள் எடுக்கும் பாடத்தை படிக்கிறபோது உற்சாகமாக இருக்கிறது. நீட் தேர்வுக்காக படிக்கிறபோது, அதில் எப்படியாவது அதிக மதிப்பெண் பெற வேண்டுமே என்ற மன அழுத்தம் ஏற்படுகிறது. ஒரே நேரத்தில் 2 விதமான பாடங்களை படிக்கிறோம். 2 தேர்வுகளும் மிக முக்கியமானவை என்று எங்கள் மீது திணிக்கப்படுகிறது. நாங்களும் கஷ்டப்பட்டு படிக்கிறோம். அப்படியே படித்து தேர்வு பெற்றால் மட்டும் போதாது, மிக அதிக மதிப்பெண் பெற்றால்தான் மருத்துவ படிப்புக்கு இலவசமாக, அதாவது கல்வி கட்டணம் மட்டும் செலுத்தி படிக்க முடியுமாம். இந்த அடிப்படையில்தான் முன்பு, பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் இடம் வழங்கினார்கள். ஆனால், வசதியானவர்கள் பணம் கொடுத்து மருத்துவப்படிப்புக்கு செல்வதாக கூறி நீட் தேர்வை கட்டாயமாக்கி உள்ளனர். இப்போது, பிளஸ்-2 வில் குறைந்த மதிப்பெண் எடுத்து, நீட் தேர்விலும் தேர்ச்சி மதிப்பெண் பெற்றவர்கள் வசதியானவர்களாக இருந்தால் பணம் கொடுத்து எளிதில் மருத்துவ படிப்பில் சேர்ந்து விடுகிறார்கள். ஆனால், வசதி இல்லாதவர்கள் பயிற்சிக்காக பணம் கொடுத்து, மீண்டும் மீண்டும் தேர்வுக்கு படித்து, சோர்ந்து போய், ஏதோ ஒரு பாடத்தை எடுத்து படிக்கும்போது 3 ஆண்டுகள் கடந்து விடும். எனவே பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம், என்ஜினீயரிங் படிப்புகளுக்கு இடம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

டி.ஜன தர்ஷினி

ஈரோட்டை சேர்ந்த மாணவி டி.ஜன தர்ஷினி கூறியதாவது:-

பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கு அனுமதி வழங்க வேண்டும். அல்லது, பிளஸ்-2 முடித்து ஓராண்டு ஆனவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற நடைமுறை வந்தால், நாங்களும் ஒரு ஆண்டு முழுவதும் நீட் தேர்வுக்கு படித்து இலக்கை அடைவோம். காரணம் 2 மற்றும் 3 ஆண்டுகள் பயிற்சி செய்தவர்கள் மட்டுமே அதிக மதிப்பெண் பெற முடிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜி.ஓவியா

ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த ஓமியோபதி மருத்துவ மாணவி ஜி.ஓவியா கூறியதாவது:-

நான் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 600-க்கு 550 மதிப்பெண்கள் பெற்றேன். நீட் தேர்வில் 720-க்கு 425 மதிப்பெண்கள் பெற்றேன். ஆனால் எனக்கு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் ஓமியோபதி கல்லூரியில் ஓமியோபதி மருத்துவம் படித்து வருகிறேன். பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் இடம் வழங்கப்பட்டு இருந்தால் எம்.பி.பி.எஸ். கிடைத்திருக்கும். நீட் தேர்வு வைத்தால்தான், தகுதியான டாக்டர்கள் கிடைப்பார்கள் என்று கூறுகிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பி.பாலசுப்பிரமணியம்

ஈரோட்டை சேர்ந்த கணித ஆசிரியர் பி.பாலசுப்பிரமணியம் கூறியதாவது:-

தொழில் சார்ந்த படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வுகள் அவசியம்தான். ஆனால் அந்த நுழைவுத்தேர்வு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்ய வேண்டும். ஒரு பாடத்திட்டத்தில் படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு வேறு ஒரு பாடத்திட்டத்தை கொடுத்து தேர்வு வைத்தால் எப்படி அவர்களால் வெற்றி பெற முடியும் என்ற எண்ணம் வேண்டும். நாடு முழுவதும் நடத்தப்படும் இந்த தேர்வு ஒரே பாடத்திட்டத்தில் இருந்து நடத்த வேண்டிய அவசியம் இல்லை. அவரவர் படித்த பாடத்திட்டங்களில் இருந்து ஒரு நுழைவுத்தேர்வினை நடத்தலாம். அப்படி 70 சதவீதம் மதிப்பெண்களை அவர்களுக்கான தகுதி மதிப்பெண்ணாகவும், பிளஸ்-2 பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களை 30 சதவீதமும் சேர்த்து தேர்ச்சியை தீர்மானிக்கவேண்டும். அப்போது பிளஸ்-2 வகுப்பில் மாணவ-மாணவிகள் நன்றாக படிப்பார்கள். மேலும், நீட் உள்ளிட்ட தேர்வுகள் மீண்டும் எழுதலாம் என்கிற வாய்ப்பு இருப்பதால் பிளஸ்-2 படிக்கும்போதே அவர்களை சிரமப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

வி.ஜெயஸ்ரீ

இயற்பியல் ஆசிரியை வி.ஜெயஸ்ரீ கூறியதாவது:-

ஒரு காலத்தில் பிளஸ்-2 மாணவ-மாணவிகள் என்றால் குறும்பும், குதூகலமுமாக இருப்பார்கள். இப்போது எதிர்கால சிந்தனை, வாழ்க்கை பற்றிய கேள்விக்கு பதில் தெரியாமை, ஆசிரியர்கள், பெற்றோர்களின் ஆசை சுமையை ஏற்று சுமக்க முடியாமல், வயது மூப்பு அடைந்தவர்கள் போல தலைமுடி நரைத்துப்போய் காணப்படுகிறார்கள். எனவே இளைய தலைமுறை மீது முறையான சுமைகளை மட்டும் வைப்பது சிறந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்.பாலகிருஷ்ணன்

வேதியியல் ஆசிரியர் ஆர்.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

மேற்படிப்பு நுழைவுத்தேர்வுகளை பொறுத்தவரை முதன் முறையாக எழுதுபவர்களுக்கு 1 சதவீதம் கூட வாய்ப்பு கிடைப்பது இல்லை. எனவே பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகள் பொதுதேர்வில் கவனம் செலுத்தலாம். நீட் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி பெறுவது தவறு இல்லை. ஜெ.இ.இ. தேர்வுக்கு 9-ம் வகுப்பு முதலே இணை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆனால் நீட் தேர்வுக்கு பிளஸ்-1 வகுப்புக்கு பிறகுதான் சிறப்பு வகுப்புகள் உள்ளன. இதையும் பொதுத்தேர்வுக்கு பின்னர் ஒரு ஆண்டு கால அவகாசம் அளித்தால் மாணவ-மாணவிகளின் மன அழுத்தம் குறையும். தற்போதைய மாணவ-மாணவிகள் உற்சாகமான மன நிலை இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இதற்கு நுழைவுத்தேர்வுகளும் முக்கிய காரணமாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story